மார்ச் 31-ந் தேதியுடன் இந்த (FY2024-25) நிதியாண்டு முடிவுக்கு வரும் நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதும், வரிகளில் இருந்து விலக்கு பெறவும் சில முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
அந்த வகையில், வரியில் விலக்கு அளிக்கக்கூடிய அல்லது வரியை சேமிக்க உதவும் சில முக்கிய முதலீட்டு திட்டங்களான, பிபிஎஃப், தேசிய ஓய்வூதிய திட்டம், ஆயுள் காப்பீடு, இஎல்எஸ்எஸ் உட்பட இன்னும் சில முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்ப்போம்.
1) தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS)
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிப்பிரிவு 80CCD (1B) இன் கீழ் வரி விலக்கு பெற முடியும். பிரிவு 80C இன் வரம்பைத் தாண்டி, கூடுதலாக, வரி செலுத்துவோர் இந்தப் பிரிவின் கீழ் ரூ.50,000 வரையிலான கூடுதல் விலக்கு கோர முடியும்.
மேலும் வரியைச் சேமிக்க, பிரிவு 80CCD (1B) இன் கீழ் பிரத்யேக விலக்கு கோர, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.50,000 வரை சேமித்து வைப்பதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். இது உங்கள் வரி விலக்கை ரூ.2 லட்சமாக உயர்த்தும் என்று மும்பையைச் சேர்ந்த வரி மற்றும் முதலீட்டு நிபுணர் பல்வந்த் ஜெயின் கூறினார்.
2) ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம் (ELSS)
முதலீடு செய்வதற்கான சிறந்த மற்றும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு திட்டம் என்றால் அது ‘ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்’ (ELSS) என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். வரி நிபுணர்களின் கூற்றுப்படி, வருமான வரிச் சட்டப் பிரிவு 80C இன் கீழ் இஎல்எஸ்எஸ் (ELSS) மிகச் சிறந்த வரி சேமிப்பு விருப்பமாக பார்க்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் லாக்-இன் காலத்துடன் வரும் இந்த திட்டம், வரிச்சுமையைக் குறைக்கும் வகையில் வருமான வரிப்பிரிவு 80C இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை சேமிக்க வழிசெய்கிறது.
3) பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) என்பது ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட, இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பிரபலமான நிலையான சிறு சேமிப்புத் திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் நம்பகமான நீண்ட கால சேமிப்புக்கு இது ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. இது வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C -இன் கீழ் தனிநபர்களுக்கு உத்தரவாதமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்குகிறது. இந்த சிறு சேமிப்புத் திட்டம் சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து தனிநபர்களுக்கும் ஏற்றதாக இருக்கிறது.
தனிநபர்கள் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், ஒருவர் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். பிபிஎஃப் முதலீடானது, 15 ஆண்டுகள் வரையிலான ஆரம்ப லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது.
4) வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகைகள்
ஆபத்தில்லாத மற்றும் அனைவருக்கும் ஏற்ற ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் என்றால் அது நிலையான வைப்புத்தொகை தான். ஆபத்தை விரும்பாதவர்கள் முதல் மூத்த குடிமக்கள் என அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் இது ஏற்றதாக பார்க்கப்படுகிறது. 5 ஆண்டுகள் லாக்-இன் காலத்தைக் கொண்ட நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடு செய்வது, வரி சேமிப்புக்கு உதவும். அதாவது, வருமான வரிப்பிரிவு 80C இன் கீழ் ஒரு தனிநபர் நிலையான வைப்புத்தொகைக்கு வரி விலக்கு பெறலாம்.
5) ஆயுள் காப்பீடு
ஒவ்வொரு தனிநபருக்கும் ஆயுள் காப்பீடு என்பது அவசியமான ஒன்று. அதே நேரத்தில், காப்பீடு வரிவிலக்கு பெறுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வருமான வரிப்பிரிவு 80D -இன் கீழ், பின்வரும் வரம்புகளுடன் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு வரி விலக்கு பெற அனுமதிக்கிறது.
* தனக்கு, மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ₹25,000 வரை. * 60 வயதுக்குட்பட்ட பெற்றோருக்கு கூடுதலாக ₹25,000. * பெற்றோர் மூத்த குடிமக்களாக (60 வயதுக்கு மேல்) இருந்தால் ₹50,000 வரை விலக்கு பெறலாம்.
இவ்வாறாக, அனைத்து விதமான வரி சேமிப்பு முதலீடுகளையும் அதன் ஆபத்து, சகிப்புத்தன்மை மற்றும் நிதி நோக்கங்களை கருத்தில் கொண்டு அதில் இருந்து விலக்கு பெறுவதும் அதனை புரிந்து கொள்வதும் மிகவும் முக்கியம்.
February 22, 2025 2:56 PM IST

