கோடைக்காலம் வந்துவிட்டால் தகிக்கும் என்று சொல்லப்படும் தலைநகர் டெல்லியைவிட, சமீபத்தில் பெங்களூருவில் வெப்பநிலை 9 டிகிரி அதிகம் பதிவானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதியன்று பெங்களூருவில் அதிகபட்சமாக 35.9°C வெப்பநிலை பதிவானது. அதே நேரத்தில் டெல்லியில் 27°C வெப்பநிலையே குறிப்பிட்ட நாளில் பதிவானது.
ஆண்டு முழுவதும் ஜில்லென்றும், பசுமையாகவும் இருக்கும் கிளைமேட்டிற்கு பெயர் பெற்ற நகரமாக திகழ்ந்த பெங்களூருவுக்கு இந்த கிளைமேட் மாற்றம் உண்மையில் அசாதாரணமானது. இதனிடையே, மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக நடப்பாண்டு கோடைக்காலத்தில் டெல்லியை விட அதிக வெப்பம் பெங்களூருவில் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
இந்த பிப்ரவரியில் ஏன் பெங்களூருவில் இவ்வளவு கொதிக்கிறது?
யாரும் எதிர்பாராத விதமாக தற்போது பெங்களூருவில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரு நகரம், ராய்ச்சூர் மற்றும் கலபுரகிக்கு அடுத்தபடியாக மாநிலத்தின் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது. வழக்கமாக பெங்களூருவில் கோடைக்காலம் மார்ச் மாத தொடக்கத்தில் துவங்கும். ஆனால், வெயில் கொளுத்துவதை பார்த்தால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத முடிவிற்குள் பெங்களூருவுக்கு கோடை தொடங்கிவிடும் என்பதை போல தெரிகிறது. பிப்ரவரி மாதத்திலேயே நிலவும் ஹாட் கிளைமேட் பெங்களூரு நகரத்திற்கு ஒரு புதிய கிளைமேட் ட்ரெண்டை உருவாக்கி உள்ளது என்று சொல்லலாம்.
IMD-ன் கூற்றுப்படி, கடந்த பிப்ரவரி 2024-ல் பதிவானதைவிட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இது விரைவாக மாறிவரும் வானிலை முறைகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
2025 கோடைக்காலம் பற்றி ஐஎம்டி-பெங்களூரு கூறியுள்ளது என்ன?
முந்தைய ஆண்டைவிட பெங்களூரு நகரத்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமாக இருக்க வாய்ப்புள்ளது என ஐஎம்டி-பெங்களூரு இயக்குநர் சிஎஸ் பாட்டீல் எச்சரித்துள்ளார். கலபுராகி போன்ற மாவட்டங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட உள்ளது குறித்தும் எச்சரித்தார். கோடைக்காலம் அடுத்தடுத்த மாதங்களில் தீவிரமடைய உள்ள நிலையில், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனினும் பீதி அடையத் தேவையில்லை என்று கூறினார்.
வெப்ப அலை பெங்களூருவை பாதிக்குமா?
இந்த கோடைக்காலத்தில் கர்நாடகாவின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் வெப்ப அலை பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு உட்பட தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என்றாலும், பெங்களூரு நகரத்தில் வெப்ப அலைகள் குறித்த அச்சுறுத்தல் உடனடியாக இல்லை. எனினும், தொடர்ந்து அதிகரித்துவரும் வெப்பநிலை பெங்களூருவின் வழக்கமான வானிலையை கேள்விக்குறியாக்கி இருப்பதால் நிலைமை, இன்னும் கவலைக்குரியதாகவே உள்ளது.
இதையும் படிக்க: “மகா கும்பமேளா அரசு நிகழ்ச்சி அல்ல.. அது ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி” – எதிர்க்கட்சிகள் விமர்சனத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்
பெங்களூரு கிளைமேட் பற்றிய முக்கிய தகவல்கள்
- கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதத்தில் டெல்லியை விட பெங்களூரு அதிக வெப்பநிலையைப் பதிவு செய்து வருகிறது. பெங்களூருவின் வெப்பநிலை 15°C முதல் 30°C வரை மாறி மாறி பதிவாகி வரும் அதே நேரம், டெல்லியின் வெப்பநிலை 12°C முதல் 16°C வரையில் இருக்க வாய்ப்புள்ளது.
- கோடை நாட்களாகவே இருந்தாலும்கூட, பெங்களூருவின் மாலை பொழுதுகள் ஒப்பீட்டளவில் இனிமையான காலநிலையாகவே முன்பு இருக்கும். வழக்கமாக பிப்ரவரியில் இந்நகரின் வெப்பநிலை சுமார் 17°C-ஆக இருக்கும்.
- பெங்களூருவில் இதுபோன்ற வெப்பநிலை உயர்வு ஏற்படுவது முதல்முறை அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நகரம் டெல்லியை விட அதிக வெப்பநிலையை தொடர்ந்து பதிவு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாட்டின் 26-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார்
பெங்களூருவில் ஏன் வெப்பம் அதிகரித்துள்ளது?
- IMDன் கூற்றுப்படி, பெங்களூருவின் வெப்பநிலை அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று, வடக்கு காற்று (northern winds) இல்லாதது. வடக்கிலிருந்து வீசும் காற்று பொதுவாக குளிர்ந்த வெப்பநிலையைப் பராமரிக்க உதவுகிறது. ஆனால், இந்த சீசனில் இந்த காற்று இந்நகரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.
- La Nina நிகழ்வு பெங்களூரு நகரின் வானிலையை பாதிக்கிறது. பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலை குளிர்விக்க காரணமான லா நினா, பெங்களூரு உட்பட உலகளாவிய வானிலை முறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிக்க: Mamata Banerjee | “நான் பிராமணர், பெருமைமிக்க இந்து…” – மம்தா பேனர்ஜி ஆவேசம்
பிப்ரவரி மாதத்திலேயே வெப்பநிலை ஏற்கனவே அதிகரித்து வருவதால், பெங்களூரு வாசிகள் வழக்கத்தை விட வெப்பமான கோடையை இந்த ஆண்டு எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். டெல்லியைவிட இந்த நகரம் தொடர்ந்து அதிக வெப்பநிலையை பதிவு செய்யக்கூடும் என்பது ஐஎம்டி-ன் கணிப்பாக உள்ளது.
Bangalore,Karnataka
February 19, 2025 5:39 PM IST
பிப்ரவரியிலேயே கொதிக்கும் நகரம்… கோடை வெப்பம் டெல்லியைவிட பெங்களூருவில் தீவிரமாக இருக்க அதிக வாய்ப்பு… IMD கணிப்பு…!

