Last Updated:
உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. உலகில் முதல் 10 பொருளாதார நாடுகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவற்றில் 9 நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி முடித்து விட்டன.
உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக திகழும் இந்தியா விரைவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நீடா அம்பானி தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய பிரதிநிதியாக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நீடா அம்பானி இந்தியாவில் விளையாட்டு துறையில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். நீடா அம்பானியின் சீரிய முயற்சி காரணமாக ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் இல்லம் நடைபெற்று முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஹவுஸ் அமைக்கப்பட்டது.
தனது அறக்கட்டளை மூலமாக இந்தியாவில் ஏராளமான விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு நீடா அம்பானி உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் நீடா அம்பானிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அடுத்ததாக நீடா அம்பானி இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு தீவிரம் காட்டி வருகிறார்.
அவரது முயற்சிக்கு விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நீடா அம்பானி பேசியதாவது-
நிச்சயமாக இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை விரைவில் நடத்தும் என்று நம்புகிறேன். உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. உலகில் முதல் 10 பொருளாதார நாடுகளை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அவற்றில் 9 நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி முடித்து விட்டன. இதில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாத நாடு எதுவென்றால் அது இந்தியாவாக தான் இருக்க முடியும்.
எங்கள் நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவதை பார்க்க விரும்புகிறோம். அது எங்களுக்கு பெருமை அளிக்கும் தருணமாக இருக்கும். அதன் காரணமாகத்தான் 2036 ஆம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க – அமெரிக்காவில் விருது பெற்ற நீடா அம்பானி.. அறப் பணிகளுக்கு மற்றுமொரு அங்கீகாரம்..
நாங்களும் அந்த இலக்கை நோக்கி மைதானங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள மைதானங்களை சீரமைப்பது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறோம். ஒருவேளை 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டால் அது ஆகச்சிறந்த ஒலிம்பிக்காக அமையும். இந்தியா மிக சரியான நேரத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் என்று கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.
February 17, 2025 9:26 PM IST
‘ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா விரைவில் நடத்தும்’ – ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி நம்பிக்கை


