Last Updated:
2023 ஆகஸ்டில் ரூ.15 இருந்த விலை, கடந்த ஜனவரி மாதம் ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பரவலுக்கு மத்தியில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் ஒரு முட்டையின் விலை, ரூ.15 ரூபாயாக இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் A கிரேட் முட்டை ஒன்றின் விலை இந்திய மதிப்பில் சுமார் 35 ரூபாயாக அதிகரித்துள்ளது. சில இடங்களில் ஒரு முட்டை சுமார் 72 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க தொழில் துறை, கடந்த ஆண்டு ஜனவரி உடன் ஒப்பிடும்போது முட்டை விலை 65% உயர்ந்துள்ளதாகக் கூறியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விலையுடன் ஒப்பிடும்போது, முட்டை விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்த பறவை காய்ச்சலை கட்டுப்படுத்த, அங்குள்ள பறவைகளை எல்லாம் கொன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 2.3 கோடி பறவைகளையும், பிப்ரவரி மாதத்தில் 1.8 கோடி பறவைகளையும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவைகள் கோழிகளாக தான் இருக்கின்றன.
இதையும் படிக்க: 5000 ஆண்டுகளுக்கு பின்னரும் கெட்டுப் போகாத எகிப்து மம்மி உடல்கள்.. என்ன காரணம் தெரியுமா?
இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு அவ்வளவு ஆபத்து இல்லை என்றும், நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளில் எந்த வைரஸும் பரவாது என்றும் விளக்கமளித்துள்ளது. புரதத்திற்கு முட்டைகளையே அதிகம் சார்ந்திருப்பதால், அமெரிக்காவில் உணவு பணவீக்கமும் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
February 17, 2025 1:55 PM IST


