Last Updated:
IPL 2025 | ஐபிஎல் 2025 முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தடை காரணமாக விளையாட மாட்டார். ரோஹித் சர்மா மும்பை அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட வாய்ப்பு.
மார்ச் 23, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில், ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால், இந்த முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார். ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ஐபிஎல் நிர்வாகம் விதித்த ஒரு போட்டி தடை காரணமாக அவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியை தவறவிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
தடை ஏன்?
2024 சீசனில் மும்பை அணி குரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது. மோசமான ஆட்டம் காரணமாக ஐந்து முறை சாம்பியன் அணியான மும்பை அணி குரூப் ஸ்டேஜிலேயே வெளியேறியது. குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் மும்பை அணி லக்னோ அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் மும்பை அணி மெதுவாக ஓவர்களை வீசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து மெதுவாக ஓவர்களை வீசியதற்காக, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்ததுடன், அவருக்கு ரூ.30 லட்சம் அபராதமும் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, தொடர்ந்து மூன்று போட்டிகளில் இதேபோல் செயல்பட்டால் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல், ஹர்திக் பாண்டியா தவிர மற்ற வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தடையின் காரணமாகவே தற்போது சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. முதல் போட்டியிலேயே ஹர்திக் பாண்டியா இல்லாதது மும்பை அணிக்கு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
ஹர்திக் இல்லாததால், முதல் போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், முதல் சாய்ஸாக இருப்பது ரோஹித் சர்மா. மும்பை அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனான ரோஹித் சர்மா. அவர் தலைமையில் ஐந்து முறை அந்த அணி கோப்பை வென்றது. கடந்த சீசனில் பேட்ஸ்மேனாக மட்டுமே ரோஹித் களமிறங்கினார். இந்த நிலையில்தான் ஹர்திக்கிற்கு பதிலாக முதல் போட்டியில் ரோஹித் கேப்டனாக மீண்டும் அணியை தலைமை தாங்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை ரோஹித் மறுக்கும் பட்சத்தில், இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டனான சூர்யகுமார் யாதவ், இந்தப் போட்டியில் மும்பை அணியை வழிநடத்தலாம். கடந்த காலங்களில் சூர்யகுமார் யாதவ் ஒருசில போட்டிகளில் மும்பை அணியை கேப்டனாக வழிநடத்தி இருக்கிறார். தற்போது இந்திய டி20 அணிக்கும் கேப்டனாக வெற்றிகரமாக செயல்படுவதால் அவருக்கும் அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 17, 2025 10:10 AM IST


