Last Updated:
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மீண்டும் கை விலங்கிடப்பட்டும், கால்கள் கட்டப்பட்டும் அழைத்துவரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 பேரும் கடந்த 5 ஆம் தேதி இந்தியா வந்தடைந்த நிலையில், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரின் கை, கால்கள் கட்டப்பட்டது நாடாளுமன்றம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் நாடு கடத்தப்படுவர்கள் குற்றவாளிகள் கிடையாது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன.
கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. அமெரிக்காவின் விமானப்படை விமானம் தங்கள் எல்லைக்குள் நுழைவது தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என கூறும் இந்த நாடுகள், சிறப்பு விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டினரை அழைத்து வருகின்றன.
அதே சமயம், நாடு கடத்தப்படுபவர்களின் கைகள், கால்கள் கட்டப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்று மாநிலங்களவையில் விளக்கம் தந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குழந்தைகள், பெண்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என தெரிவித்தார். நாடு கடத்தப்படுபவர்களுக்கு எந்த அவமானக்கரமான சூழலும் ஏற்படாத வகையில், அமெரிக்க அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
சட்டவிரோதமாக குடியேற முயன்றவர்கள் இது போன்று நாடு கடத்தப்படுவது தொடரும் என்று ட்ரம்ப் அரசு தெரிவித்திருந்த நிலையில், அடுத்தக்கட்டமாக வருவோரின் கைகள், கால்களும் கட்டப்பட்டிருக்குமா என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி இருந்தார். இதை தடுப்பது மத்திய அரசுக்கான சவால் என்றும், நம் நாட்டு மக்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபருடன் பேசி கைகள், கால்கள் கட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 116 பயணிகளுடன் சி17 விமானப்படையில் அமெரிக்காவில் இருந்து 116 பேர், அமிர்தசரஸ் வந்தடைந்தனர். தங்களின் 20 மணி நேரத்துக்கு மேலான இந்த பயணத்தில் தங்கள் கைகள் விலங்கிடப்பட்டும் கால்கள் கட்டப்பட்டுதான் இருந்ததாக பஞ்சாப்பை சேர்ந்த தல்ஜித் சிங் என்ற பயணி தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
February 16, 2025 8:13 PM IST
மீண்டும் கைவிலங்கு.. இந்தியா எதிர்ப்பை மீறி 119 பேருக்கு கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பிய அமெரிக்கா


