Last Updated:
Valentine’s Day Rose: நாளை காதலர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று ரோஜா பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நாளை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. காதலர்கள் தங்களுக்குள் அன்பையும், பாசத்தையும் பகிர்ந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்குவது வழக்கம். அதிலும் காதலன் தன் காதலிக்கு எத்தனையோ விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொடுத்தாலும் அதில் ரோஜாவுக்கு என்று தனி இடம் உண்டு.
இந்த நிலையில் தான் காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ரோஜா பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் காதலர் தினத்திற்காகப் பல பகுதிகளிலிருந்து ரோஜா பூக்கள் விற்பனைக்காகக் குவியத் தொடங்கியுள்ளது. மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஒரு ஸ்டெம் ரோஜா பூக்கள் கட்டு ரூ. 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 600 வரை ஒரு கட்டு விலை அதிகரித்துள்ளது.
மேலும் மற்ற ரோஜா பூக்களும் வழக்கத்திற்கு மாறாக விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பூக்களுக்குப் பெயர் போன நீலகிரி மாவட்டத்தில் சிவப்பு வண்ண ரோஜாக்களின் உற்பத்தி குறைவாக உள்ளதால், காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டிக்கு அதிகமான அளவு ஓசூர் பகுதியிலிருந்து ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Karnataka Park: சீசனுக்கு முன்பே சிலுசிலுவென பூத்துள்ள மலர்கள்… டூரிஸ்ட் கண்ணை கவரும் ஜின்னியா மலர்கள்…
பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கினாலும் சிகப்பு ரோஜாக்களுக்கு காதலர்கள் மத்தியில் என்றுமே வரவேற்பு அதிகம். அந்த வகையில் ஊட்டியில் காதலர் தினத்தை முன்னிட்டு குவிந்துள்ளது சிவப்பு வண்ண ரோஜா மலர்கள்.
காதலர் தினம் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுவதைப் போல பெரிய அளவில் இல்லை என்றாலும் தற்பொழுது வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடம் இவ்வாறான கொண்டாட்டங்கள் அதிக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் காதலர் தினத்தில் ரோஜா மலர்களின் விற்பனையும் களைக்கட்டும் என எதிர்பார்க்கின்றனர் வியாபாரிகள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
The Nilgiris,Tamil Nadu
February 13, 2025 5:35 PM IST

