Last Updated:
ஸ்டேஷனரி கடை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்தவர் உயிரிழந்ததாகச் செய்தி பரவி உறவினர்களும் கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கினர்.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்த நபரை, வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஷிகானின் பங்காபுராவைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி. 45 வயதான இவர் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிஷ்டப்பாவிற்கு சமீபத்தில் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென அவரின் பல்ஸ் நின்று போனது. பல மணி நேரத்திற்கு மேலாக பேச்சு மூச்சில்லாமல் வெற்று உடம்பாய் போனார்.
இதனால் சிகிச்சை பலனின்றி பிஷ்டப்பா உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். ஸ்டேஷனரி கடை நடத்தி குடும்பத்தை கவனித்து வந்தவர் உயிரிழந்ததாகச் செய்தி பரவி உறவினர்களும் கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கினர். ஊர்க்காரர்களுக்குச் சொல்லி அனுப்பியவர்கள், பிஷ்டப்பாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். அப்போதுதான் அந்த அதிசய திகிலூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.
வாகனத்தில் மனைவி, இரு மகன்கள் இருந்தனர். இளைய மகன், அப்பா அங்கு பாருங்கள். நீங்கள் விரும்பி சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துவிட்டது எழுந்திருங்கள் என கூறி அழுதுள்ளார். இதை கேட்ட பிஷ்டப்பா, ஹா… என்று கூறி மூச்சை இழுத்து விட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், ஆம்புலன்சை நிறுத்தி, உடனடியாக ஷிகானில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குள்ள மருத்துவரிடம் விஷயத்தைக் கூறினர். இரண்டு மணி நேரம் செயற்கை சுவாச கருவி பொருத்தும்படி, செவிலியரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு மணி நேரத்துக்குப் பின், தீவிர சிகிச்சைக்கு கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தனர். அதே ஆம்புலன்சில், கிம்ஸ் மருத்துவமனைக்கு பிஷ்டப்பா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் உயிர் பிழைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், பிஷ்டப்பா இறந்து விட்ட தகவல் அறிந்ததும் உறவினர்கள் சிலர், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பிரின்ட் செய்து, கிராமத்தில் ஒட்டினர்.
அத்துடன் சிலர் வாட்அப், எக்ஸ் சமூக வலைத்தளங்களிலும் அவரின் படத்தை பதிவேற்றம் செய்து, இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டிருந்தனர். அவர் உயிர் பிழைத்த தகவல்கள் அறிந்ததும் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டிருந்த படங்கள், இரங்கல் பதிவுகள் அகற்றப்பட்டன. இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் உயிருடன் எழுந்து சம்பவம் கர்நாடகாவில் காட்டுத்தீயாய் பரவுகிறது.
February 12, 2025 7:09 PM IST
ஆம்புலன்ஸில் எடுத்து செல்லப்பட்ட தந்தை சடலம்… மகன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை – அடுத்து நடந்த அதிசயம்!


