Last Updated:
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய மாநில அரசுக்கு 12 கேள்விகளை எழுப்பி, பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையின்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு 12 கேள்விகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் புதன்கிழமை வெளியாகியுள்ளது. அதில் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி, மீண்டும் அது, திருத்தங்களுடனோ, இல்லாமலோ ஆளுநருக்கு அனுப்பினால், அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரால் முடிவு செய்ய இயலுமா என்றும் குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு மசோதாவை ஆளுநர் அனுப்ப முடிவெடுக்கும்போது, அனைத்து மசோதாக்களுக்கும் பொருந்துமா ? அல்லது மாநில அரசுக்கு அப்பாற்பட்ட விவகாரங்களாக கருதப்படும் சில மசோதாக்களுக்கு மட்டும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் சாசனப் பிரிவு 200 -ன் கீழ் மசோதா மீதான முடிவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் தெரிவிக்க வேண்டும் எனக் கூற முடியுமா உள்ளிட்ட 12 கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
இந்த கேள்விகளுக்கு மத்திய அரசும், வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசும் ஒரு வாரத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
February 12, 2025 12:48 PM IST


