கோம்பாக்:
இன்று நாடு தழுவிய நிலையில் தைப்பூசக் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அந்தவகையில் 1.5 மில்லியன் பக்தர்கள், பார்வையாளர்கள் பத்து மலையில் கூடியுள்ளனர் என்று சிலாங்கூர் காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை இன்று நண்பகல் வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.


அதேநேரம் மாரடைப்பு காரணமாக நேற்று ஒருவர் பத்துமலையில் உயிரிழந்தார் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும் பெரும் திரளான மக்கள் வருகை தந்தபோதிலும், பத்து மலையைச் சுற்றியுள்ள நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும், தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு மற்றும் சுமூகமான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 1,500 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.


“தற்போது, அப்பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் உள்ளது, பத்து மலைக்கு அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகருகிறது,” என்றும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க அப்பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் பொதுமக்கள் கடைபிடிக்குமாறும் ஹுசைன் அறிவுறுத்தினார்.


இதற்கிடையில், பத்து மலை தைப்பூசக் கொண்டாட்டத்தின் போது தடையற்ற தொலைத்தொடர்பு சேவைகளை உறுதி செய்ய சம்மந்தப்பட்ட சேவை வழங்குநர்களை வழிநடத்துவதற்கான நடவடிக்கைகளை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) முன்னெடுத்துள்ளது.
மேலும் பத்துமலையில் தைப்பூசக் கொண்டாட்டம் எந்த நெட்வொர்க் பிரச்சனையும் இல்லாமல் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய, MCMC மற்றும் முக்கிய சேவை வழங்குநர்கள் பிப்ரவரி 5 முதல் அப்பகுதியில் விரிவான நெட்வொர்க் மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளனர் என்று துணைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.


“இது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது அல்லது நிகழ்வு முழுவதும் முக்கியமான தகவல்களை அணுகுவது என அனைவரும் தொடர்ந்து இணைந்திருக்க உதவும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.


