Last Updated:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் கே.நடராஜன் மீது, ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு.
இந்திய கடற்படை அதிகாரிகளின் வருடாந்திர ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்த புகாரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் இயக்குநர் கே.நடராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
2021 ஆம் ஆண்டு கடற்படை முன்னாள் துணை இயக்குநரான ராகேஷ் பால் என்பவர், வருடாந்திர ரகசிய அறிக்கையில் முறைகேடு செய்து, தனது பணி உயர்வை தாமதப்படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, பாதுகாப்பு படை சார்பில் உண்மை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு, 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான வருடாந்திர ரகசிய அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது.
அதில், முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியான நிலையில், பாதுகாப்பு படை சார்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கை கையில் எடுத்த சிபிஐ, 2014 ஆம் ஆண்டு ரகசிய அறிக்கையில், புகார் அளித்த ராகேஷ் பால் என்பவரின் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு, ஒரு சில அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது உறுதியானது.
இந்த முறைகேடுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் இயக்குநர் கே.நடராஜன், கண்காணிப்பில் இருந்த போது நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், முன்னாள் இயக்குநர்களும் இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், பல அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.
February 11, 2025 10:16 PM IST


