அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் கரீபியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பெருங்கடல் படுகைதான் மெக்சிகோ வளைகுடா. சுமார் 16 முதல் 20 லட்சம் சதுர கி.மீ கடல் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில், மெக்சிகோவின் தமௌலிபாஸ், வெராக்ரூஸ், தபாஸ்கோ, காம்பேச், யுகடன் ஆகிய ஐந்து மாகாணங்களின் கடற்கரைகளும், அமெரிக்க மாகாணங்களான ஃப்ளோரிடா, அலபாமா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ் மற்றும் கியூபாவின் பினார் டெல் ரியோ, ஆர்டெமிசா ஆகிய மாகாணங்களின் கடற்கரைகளும் உள்ளன.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்திப் பகுதிகளில் மெக்சிகோ வளைகுடாவும் ஒன்று. அமெரிக்காவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 14 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் 5 சதவீதமும் இந்த வளைகுடாவிலிருந்தே கிடைக்கிறது. மெக்சிகோவுக்கும் இந்த வளைகுடா மிகவும் முக்கியமானது, ஏனெனில் மெக்சிகோவுக்கு இங்கிருந்து கிடைக்கும் எண்ணெய் அதன் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

