Last Updated:
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், இனக் கலவரத்தை தூண்டும் ஆடியோ வெளியான பின்னர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார்.
இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது. இந்த மோதல் பெரும் கலவரமாக மாறி இரு தரப்பிலும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல்லாயிரம் கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இணையச் சேவை தடை செய்யப்பட்டது. பிறகு இணையச் சேவை கொடுத்த பிறகு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் இரு பெண்கள் ஆடைகள் அற்று சாலையில் இழுத்து செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகியது. அதுவே அந்த மாநிலத்தின் கோர நிலைமையை உலகுக்கு காட்டியது.
அதன்பிறகு பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக மணிப்பூரில் கலவரங்கள் ஓய்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிவந்தனர். ஆனால், அவ்வப்பொழுது ஆங்காங்கே சில தாக்குதல் சம்பவங்கள் மணிப்பூரில் நடந்துவந்தது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவை நேரில் சந்தித்தார். அப்போது பிரேன் சிங், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார்.
மணிப்பூரில் இனக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
February 09, 2025 6:39 PM IST


