Last Updated:
27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது. 70 தொகுதிகளில் 48 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
27 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் தாமரை மலர்ந்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கிறது.
70 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்ற நிலையில், பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3 ஆவது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு பின், பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மியிடமிருந்து டெல்லி விடுதலை பெற்றுள்ளதாகவும், வருகிற சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆம் ஆத்மி அரசின் ஊழல் தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து ஊழலை ஒழிக்கப்போவதாக வந்த ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரும் ஊழல்களை செய்ததாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் பாஜகவிற்கு வெற்றியை கொடுத்த டெல்லி மக்களுக்கு இரட்டை வேகத்தில் வளர்ச்சியை கொடுப்பதாகவும் உறுதியளித்தார். நாட்டில் உள்ள அனைத்து பாஜக தொண்டர்களுக்கு டெல்லிக்கு சேவை செய்ய முடியாதது, வருத்தமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது டெல்லி மக்கள் தங்கள் கோரிக்கையை ஏற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: டெல்லியில் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? லிஸ்டில் உள்ள 5 பேர்..!
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, யாரும் எதிர்பாராத வகையில் ஹரியானாவிலும், மகாராஷ்டிராவிலும் தற்போது டெல்லியிலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். தோல்வி பெறுவதில் ஹாட்ரிக் அடித்து, காங்கிரஸ் கோல்டு மெடல் வாங்கியிருப்பதாகவும் பிரதமர் மோடி பரிகாசம் செய்தார்.
February 09, 2025 7:14 AM IST


