
டெல்லி சட்டப்பேரவையை 27 ஆண்டுகளுக்குப் பின் கைப்பற்றியுள்ளது பாஜக. அதேநேரம் மிகப்பெரிய தோல்வியை கண்டிருக்கிறது ஆம் ஆத்மி. அக்கட்சியின் முகமாக இருந்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நியூ டெல்லி தொகுதியில் 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். கெஜ்ரிவாலை வீழ்த்திய பாஜக வேட்பாளர் பர்வேஷ் ஷாஹிப் சிங் வர்மா டெல்லியின் முதல்வர் ரேஸில் பாஜகவின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான், வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது பர்வேஷ் வர்மா – அமித் ஷா சந்திப்பு நடந்திருக்கிறது.
யார் இந்த பர்வேஷ் வர்மா?
வாரிசு அரசியல்வாதியாக டெல்லி அரசியல் களத்துக்கு வந்தவர் பர்வேஷ் வர்மா. டெல்லியில் உள்ள ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். டெல்லியின் முன்னாள் முதல்வரும், முன்னாள் பாஜக தலைவருமாக இருந்த சாஹிப் சிங் வர்மாவின் மகன் தான் பர்வேஷ். இவரின் குடும்பமே அரசியல் பின்னணி நிறைந்தது. பர்வேஷின் உறவினர் ஆசாத் சிங் வடக்கு டெல்லி மாநகராட்சி மேயராகப் பணியாற்றியவர். முன்னாள் மத்திய அமைச்சரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவருமான விக்ரம் வர்மாவின் மகள் ஸ்வாதி சிங்கைத் தான் பர்வேஷ் மணமுடித்திருக்கிறார்.
டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா போன்ற பகுதிகளில் பரவியிருக்கும் பெரும்பான்மையான இனமான ஜாட் இனத்தைச் சேர்ந்தவர் பர்வேஷ். தனது குடும்பத்தைப் பின்பற்றி, கல்லூரி படிப்புக்குப் பிறகு அரசியலில் கால்பதித்த பர்வேஷ், 2009 பொதுத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால், அவருக்கு பாஜக அனுமதி வழங்கவில்லை.
அப்போதே தனக்கு இருந்த ஜாட் சமூக செல்வாக்கு மூலம் பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்தார் பர்வேஷ். அதனொரு பகுதியாக பர்வேஷுக்குத் தேர்தலில் சீட் மறுத்த முடிவை, ஜாட் விவசாயிகளின் அமைப்பான மகா பஞ்சாயத்து வன்மையாகக் கண்டித்தது. இதனையடுத்து 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மெஹ்ராலி தொகுதியிலிருந்து கட்சியின் வேட்பாளராக பர்வேஷ் வர்மாவை பாஜக அறிவித்தது. இத்தேர்தலில் தனது செல்வாக்கைக் காண்பித்து முதல் வெற்றியைப் பெற்ற பர்வேஷை, 2014 மக்களவைத் தேர்தலில், மேற்கு டெல்லி மக்களவைத் தொகுதி வேட்பாளராக்கியது பாஜக. இதில், 2,68,586 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.
2019 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் களமிறங்கிய பர்வேஷ், டெல்லி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 578,486 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையைப் படைத்தார். டெல்லி வரலாற்றில் எந்தவொரு மக்களவை வேட்பாளரும் இதுவரை வென்றிராத அதிகபட்ச வாக்கு வித்தியாசம் இது.
இந்த நிலையில்தான் தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் பர்வேஷை அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு எதிராகக் களமிறக்கியது. அதற்கேற்றார்போல் ஆக்ரோஷ பிரச்சாரத்தை கெஜ்ரிவாளுக்கு எதிராகச் செய்துவந்தார் அவர். ஏற்கனவே, சர்ச்சை பேச்சுக்களுக்குச் சொந்தக்காரராக அறியப்படும் பர்வேஷ், தற்போதையை தேர்தலில் “கெஜ்ரிவாலை அகற்று, தேசத்தைக் காப்பாற்று” (Remove Kejriwal, Save the Nation) என்கிற கோஷத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்துவந்தார். மேலும் ஆம் ஆத்மி அரசின் நிர்வாகம் அதன் முதன்மை உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை என்று தொடர்ச்சியாக விமர்சித்தார். தனது பிரச்சாரத்தில், டெல்லி அரசாங்கத்தின் நிர்வாக செயல்திறனை, குறிப்பாக டெல்லியின் மாசுபாடு குறித்த பிரச்சினைகளை, பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சினைகளை முன்னிறுத்திக் கடுமையாக விமர்சித்தார்.
இது அவருக்குக் கைகொடுக்க, தற்போது கெஜ்ரிவாலை வீழ்த்தி அபார வெற்றிபெற்றிருக்கிறார். வரலாற்று ரீதியாக, நியூ டெல்லி தொகுதியின் வெற்றியாளர் பெரும்பாலும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அது காங்கிரஸின் ஷீலா தீட்சித் அல்லது ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆக இருக்கலாம். எப்படி, இதே நியூ டெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தை வீழ்த்திக் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆனாரோ, தற்போது அதே பாணியில் பர்வேஷ் முதல்வராக அதிகம் வாய்ப்பு இருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அந்தப் பேச்சுக்கள் உண்மையா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.
Delhi,Delhi,Delhi
February 08, 2025 1:50 PM IST
Delhi Election 2025 | கெஜ்ரிவாலை அவரின் கோட்டையிலேயே வீழ்த்திய பாஜகவின் ஆயுதம்.. யார் இந்த பர்வேஷ் வர்மா? – அடுத்த முதல்வரா?

