
Last Updated:
Delhi Election 2025 | பாஜக இதனை பரப்புரை ஆயுதமாக கையிலெடுத்தது. விஐபி கலாச்சாரத்தை எதிர்த்துப் பேசி வந்த கெஜ்ரிவால், அதனை மீறி விட்டதாக குற்றம் சாட்டியது. பாஜகவிற்கு சமமாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரப்புரை மேற்கொண்டார் ராகுல் காந்தி.
தலைநகர் டெல்லியில் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக ஸ்டிரைக் ரேட்டைப் பெற்று அசத்திய ஆம் ஆத்மி கட்சி தற்போது படுதோல்வியை சந்தித்துள்ளது. அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று, டெல்லியில் கல்வி மற்றும் சுகாதாரத்தில் பெரும் திட்டங்களை அளித்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றது ஆம் ஆத்மி. இது மட்டுமல்லாமல், குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கு வழங்கப்பட்ட மானியங்களும் மக்களை மகிழ்ச்சியாகவே வைத்திருந்தன.
ஆனால், முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மிக மோசமான காற்றின் தரம் ஆகியவற்றையும் மக்கள் உற்று நோக்கி வந்தனர். பல்வேறு நலத்திட்டங்களுக்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாக, பத்து ஆண்டுகளாக ஆம் ஆத்மி கூறி வந்தாலும், அவற்றை சாக்குப்போக்காகவே டெல்லி மக்கள் பார்த்தனர். இதனை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, ‘டபுள் என்ஜின்’ என்ற முழக்கத்தை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டது.
டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி எதிர்கொண்ட முக்கிய பிரச்சனை, அக்கட்சியின் மதுபானக் கொள்கை. டெல்லியை மதுப்பிரியர்களின் கூடாரமாக மாற்றிவிட்டதாக ஆம் ஆத்மி அரசு மீது பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. ‘1 பாட்டில் வாங்கினால், 1 பாட்டில் இலவசம்’ என்ற கொள்கை பொது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. இது மட்டுமல்லாமல் புதிய கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அர்விந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாஜக பொய் குற்றச்சாட்டை கூறுவதாக ஆம் ஆத்மி கூறி வந்தாலும், அதன் மீதான ஊழல் அற்ற ஆட்சி என்ற கட்டமைப்பு தகர்க்கப்பட்டது. இந்தப் பிரச்சனை காரணமாக, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த ஆம் ஆத்மி தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அர்விந்த் கெஜ்ரிவாளுக்கு எதிராக பாஜக எடுத்த முக்கிய ஆயுதம் ‘ஷேஷ் மஹால்’ … கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ இல்லமே ஷேஷ் மஹால் என அழைக்கப்படுகிறது. இந்த இல்லத்தை சீரமைக்க 33 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மத்திய தணிக்கை அதிகாரி கூறியதைத் தொடர்ந்து, பாஜக இதனை பரப்புரை ஆயுதமாக கையிலெடுத்தது. விஐபி கலாச்சாரத்தை எதிர்த்துப் பேசி வந்த கெஜ்ரிவால், அதனை மீறி விட்டதாக குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் பாஜகவிற்கு சமமாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து பரப்புரை மேற்கொண்டார் ராகுல் காந்தி. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, ‘ஷேஷ் மஹால்’லை குறிப்பிட்டு கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார். ஆம் ஆத்மி கட்சிக்கு கடைசி ஆணி அடித்தது மத்திய அரசின் பட்ஜெட். நடுத்தர மக்களின் வாழ்க்கைச் செலவு கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், வருமான வரி விலக்கு உச்சவரம்பை ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பு, டெல்லி வாக்காளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மிக அண்மைக்காலத்தில் வந்த இந்த அறிவிப்பு… சுடச்சுட வாக்காளர்களை பாஜகவிடம் சேர்த்து விட்டது என்றே கூறலாம்.
Delhi,Delhi,Delhi
February 08, 2025 5:53 PM IST
Delhi Election 2025 | வாக்காளர்களை கவர்ந்த பாஜகவின் கடைசி அஸ்திரம்.. டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றது ஏன்? – காரணங்கள்!

