குளுவாங் ,
2030ஆம் ஆண்டுக்குள் ஒரே நேரப் பள்ளி அமர்வை நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்துவதை கல்வி அமைச்சு இலக்காகக்கொண்டு அதற்குரிய சீரிய திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது என்று அதன் அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார். மாணவர்கள் அதிகமான எண்ணிக்கை கொண்ட சில பள்ளிகளில் ஒரே நேரப் பள்ளி முறையை அமல்படுத்துவதற்கு இயலாமல் உள்ளது என்று அவர் சொன்னார்.
நாடு முழுவதும் ஒரு நேரப் பள்ளி முறையை அமல்படுத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் அதன் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட வேண்டும். தரமும் உயர்த்தப்பட வேண்டும்.சிதிலமடைந்த பள்ளிகளைப் புனரமைப்புச் செய்ய வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் வரும் 5 ஆண்டுகளில் முழுமைபெறும் பட்சத்தில் அமைச்சின் இலக்கு நிறைவேற்றப்படுவதற்கு ஏதுவாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
இப்போது மாணவர்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் காலை – மாலை என இரண்டு நேரக் கல்வித்திட்டம் அமலில் இருக்கிறது. பெற்றோர் தரப்பில் ஒரே நேரப் பள்ளி முறைக்குத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்பணி அவ்வளவு எளிதானதல்ல. அனைத்து நிலைகளிலும் பல்வேறு மாற்றங்களையும் கூடுதல் வசதிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று இங்கு இந்தான் எனப்படும் தேசியப் பொது நிர்வாக அமைப்பின் தென் மண்டல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஃபட்லினா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச்சேவை இலாகா துணைத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அனிசி இப்ராஹிம், தலைமைக் கல்வி இயக்குநர் அஸ்மான் அட்னான் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியில் தவறுகள் செய்யும் மாணவர்களுக்குப் பிரம்படி தண்டனை விதிப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது தண்டனை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் ஏற்கென்வே உள்ளன. பிரம்படி கொடுப்பது தலைமையாசிரியர் அல்லது கட்டொழுங்கு ஆசிரியர்களின் அதிகாரத்திற்குட்பட்டது என்று கல்வி அமைச்சர் விளக்கமளித்தார்.


