Last Updated:
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயன்றர்கள் நாடு கடத்தப்பட்டனர். பலர் பணம், சொத்துக்களை இழந்து சோகத்தில் உள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம்புக விரும்புவோர், சரியான உணவுகூட இன்றி காடு, மலை, கடல்களை கடந்து சென்று சட்டவிரோதமாக குடியேற பயன்படுத்தும் பாதையை தான் ‘கழுதை பாதை’ என்கிறார்கள். அப்படி, ‘கழுதை பாதை’யை பயன்படுத்தி மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகள் வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் தான், ட்ரம்ப் அரசால் முதன்முறையாக நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்.
இதில், 30 லட்சம் ரூபாய் பணத்தை கட்டி முறையாக அமெரிக்காவுக்கு குடியேற முயன்று முகவரால் ஏமாற்றப்பட்டதாக தனது கண்ணீர் கதையை பகிர்ந்துள்ளார் பஞ்சாபை சேர்ந்த 36 வயது ஜஸ்பால் சிங். கடந்த ஜூலை மாதம் விமானம் மூலம் பிரேசில் அழைத்துச் செல்லப்பட்ட ஜஸ்பால், அதன் பின்னர் முகவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இதனால், செய்வதறியாது அங்கேயே 6 மாதங்களுக்கு அலைந்து திரிந்தவர், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அமெரிக்கா எல்லைக்குள் நுழைவதற்குள்ளே கைது செய்யப்பட்ட ஜஸ்பால், 10 நாட்களாக சூரிய ஒளியை கூட உணரமுடியாத இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டார். விலங்குகளை போன்று கைகள் விலங்குகளாலும் கால்கள் சங்கிலியாலும் கட்டப்பட்டு விமானத்தில் ஏற்றும் போதுதான் தாங்கள் நாடு கடத்தப்படுவதையே அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு மாட்டப்பட்ட விலங்குகள், அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த பிறகே அவிழ்க்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், பஞ்சாப்பின் ஹோஷியார்பூரைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங், கடைசி நேரத்தில் விசா கிடைக்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார், பிரேசில், பெரு, கொலம்பியா, பனாமா, நிகரகுவா வழியாக மெக்சிகோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்க குடியுரிமைக்கான இந்த ‘கழுதை பாதை’ பயணத்துக்காக முகவருக்கு 42 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறும் ஹர்விந்தர் சிங், ஒரு சில இடங்களில் தான் அரிசி உணவு கிடைத்ததாகவும் பல நாட்கள் பிஸ்கட் மட்டுமே உண்டு வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான மலைப்பாதையை கடந்து சென்ற போது பனாமா காட்டில், மெக்சிகோ நோக்கிய 4 மணி நேர பயணத்தின்போது படகு கவிழ்ந்ததில் ஒருவர் என உடன் வந்தவர்களை கண்முன்னே இழந்த சோகத்தை விவரித்துள்ளார் ஹர்விந்தர்.
சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற குஜராத் குடும்பமும் நிற்கதியாய் நிற்பது சோகத்தின் உச்சம்.
இதுமட்டுமின்றி, விவசாய நிலத்தை விற்று 42 லட்சம் ரூபாய் செலவு செய்து மருமகனை அனுப்பியவர், பேரனை அனுப்பி வைத்த ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர், வீட்டை விற்றும் வட்டிக்கு கடன் வாங்கியும் அனுப்பி வைத்த சொந்தங்கள் என அனைத்தையும் இழந்து கடன்காரர்களாய் நிற்போரின் கண்ணீர் கதைகள் ஏராளம்.
February 06, 2025 10:24 PM IST
சட்டவிரோத குடியேற்றம்: அமெரிக்காவிற்கு செல்ல பயன்படுத்திய கழுதை பாதை.. அனைத்தையும் இழந்து தவிக்கும் நபர்கள்


