Last Updated:
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்பியபோது அமெரிக்கா அவர்களுக்கு கை விலங்கிட்ட விவகாரம் குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானமான சி19 மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில், ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 33 நபர்களும், பஞ்சாப்பில் இருந்து 30 பேரும், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேரும், சண்டிகரைச் சேர்ந்த இருவரும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டபோது, தங்கள் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், “சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல. கடந்த 2009ம் ஆண்டில் இருந்தே இந்த நடைமுறை இருந்துவருகிறது. சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது. அப்படி அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்படுபவர்களுக்கு விலங்கு போடும் நடைமுறை 2012ம் ஆண்டு முதல் அங்கு அமலில் உள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு விலங்கு போடமாட்டார்கள்.
நாடு கடத்தப்படும் இந்தியர்களை தவறாக நடத்தாமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவிடம் பேசி வருகிறோம். நாடு கடத்தப்பட்டவர்கள் அளிக்கும் தகவலின்படி, அவர்களை அனுப்பிய முகவர்கள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
February 06, 2025 4:07 PM IST


