Last Updated:
அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் மற்றும் காவல்துறை இடையேயான விகிதாசாரம் குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமான எழுப்பட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
இந்தியாவில் பிற பகுதிகளை விட வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மக்கள் தொகைக்கும், காவல்துறை எண்ணிக்கைக்கும் உள்ள விகிதாச்சாரம் குறித்த தகவல்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 159.54 காவலர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இந்த விகிதம் முறையே 156.89, 148.54, 155.77 மற்றும் 154.25 ஆக இருந்தது.
மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களில், பஞ்சாபில் ஒரு லட்சம் மக்களுக்கு 241.02 காவலர்களும், இமாச்சலப் பிரதேசத்தில் 240.40 காவலர்களும், ஹரியானாவில் 199.08 காவலர்களும், உத்தராகண்டில் 183.96 காவலர்களும், ஆந்திராவில் 165.89 காவலர்களும் உள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சமாக, பீகாரில் ஒரு லட்சம் மக்களுக்கு 81.49 காவலர்களே உள்ளனர். மேற்கு வங்காளத்தில் 101.13 காவலர்களும், ராஜஸ்தானில் 118.18 காவலர்களும், ஒடிசாவில் 120.58 காவலர்களும், மத்தியப் பிரதேசத்தில் 121.13 காவலர்களும் உள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாகாலாந்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 1,135.9 காவலர்களும், மணிப்பூரில் 941.63 காவலர்களும், சிக்கிமில் 834.40 காவலர்களும், அருணாச்சலப் பிரதேசத்தில் 766.75 காவலர்களும் உள்ளனர். கிளர்ச்சி அச்சுறுத்தல், மலைப்பாங்கான நிலப்பரப்பு, பல்வேறு இனக்குழுக்கள் இடையேயான மோதல்கள் மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு ஆகியவை வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான காரணங்களாகும்.
February 06, 2025 11:55 AM IST
நாட்டிலேயே வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறையினர் விகிதம் அதிகம் இருப்பது ஏன்? பின்னணி காரணம் இதுதான்!


