நிர்மலா செல்வம்
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள 124 ஆண்டுகள் பழமை மிக்க விவேகானந்தா ஆசிரம கட்டடமும் அதன் சுற்று வளாகமும் மரபுரிமை பகுதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற தகவலால் சுற்றுவட்டார பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
2040 கோலாலம்பூர் ஊராட்சி பெருந்திட்ட வரைவில் கட்டடமும் அதன் சுற்று வளாகமும் மரபுரிமை பகுதியாக அங்கீகரிப்படவில்லை என்று மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.
கோலாலம்பூரை பாதுகாப்போம் கூட்டமைப்பின் விளக்கமளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட குடியிருப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பாரம்பரிய பகுதி வரைவுத் திட்டத்தில் வரலாற்றுப்பூர்வ அடையாள சின்னமாக விளங்கிய விவேகானந்த ஆசிரம கட்டடம் இடம்பெறாததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.


இந்த பகுதி கலப்பு மேம்பாட்டுக்காக அடையாளம் காணப்பட்டிருப்பினும் 2020 கோலாலம்பூர் ஊராட்சி பெருந்திட்டத்தில் பாரம்பரிய கட்டடமாக இடம்பெற்றிருந்தது. ஆனால் ஆகக் கடைசியான நிலவரத்தில் விவேகானந்தா ஆசிரமும் அதன் சுற்றுவளாகமும் விடுபட்டு இருப்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் விவேகானந்தா ஆசிரமம் சிக்கல்களை எதிர்நோக்கியபோது அதனை காப்பாற்றுவதற்காக களம் இறங்கி போராடியவர்களில் ஒருவரான வழக்கறிஞர் தேவகுஞ்சரி துன் சம்பந்தன் விவேகானந்தா ஆசிரமமும் அதன் சுற்றுவளாகமும் மலேசிய பாரம்பரிய பகுதியாக அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்.
மலாயாவில் தொடக்கக் காலத்தில் குடியேறியவர்கள் கோலாலம்பூரில் வாழ்ந்தபோது அவர்கள் சிந்திய ரத்தம் , வியர்வை, கண்ணீர் ஆகியவற்றின் அடையாளமாக விவேகானந்தா ஆசிரமம் கட்டி எழுப்பப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
2040 கோலாலம்பூர் ஊராட்சி பெருந்திட்ட வரைவில் விவேகானந்தா ஆசிரமும் அதன் சுற்று வளாகமும் பாரம்பரிய அந்தஸ்திலிருந்து விடுபட்டிருப்பது அதிர்ச்சியோடு ஏமாற்றம் அளிப்பதாகவும் ஆச்சரியம் தருவதாகவும் உள்ளது என்று கோலாலம்பூரை பாதுகாப்போம் கூட்டமைப்பின் தலைவர் டத்தோ எம்.அலி கூறினார்.
இந்த இடத்தின் அந்தஸ்தை மாற்றுவது என்பது மிகப் பெரிய பேரிடியாகும். கோலாலம்பூர்வாசிகள் ஒன்றிணைந்து ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி வரைஅவகாசம் இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.




