Last Updated:
கனிமொழி எம்.பி., ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கி நடைபெற்றுவருகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றிவருகின்றனர். அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது உரையை நிகழ்த்தினார். இதில், அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
உரையின் இறுதி கட்டத்தில் கனிமொழி எம்.பி., பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நெருக்கடி தருவதாக பேசினார். குறிப்பாக தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் நடத்தை குறித்து இங்கு பேசக்கூடாது என்று தெரிவித்தார்.
அதேசமயம், பாஜக எம்.பி. ஒருவர் எழுந்து, கனிமொழி மூத்த உறுப்பினர் ஆளுநர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்று தெரியாதா? ராகுல் காந்தியும் இதேபோல் தான் பேசுகிறார். இவரும் அதேபோல் பேசுகிறார் என்று தெரிவித்தார். அப்போது சபாநாயகர் கனிமொழி எம்.பி., ஆளுநர் குறித்து பேசியக் கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று தெரிவித்தார்.
February 03, 2025 5:52 PM IST


