
நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.
பட்ஜெட் என்றவுடனேயே பெரிதும் எதிர்பார்ப்பது மாத ஊதியதாரர்கள் தான். வருமான வரி செலுத்தியது மட்டுமின்றி, மீதமுள்ள பணத்தை செலவு செய்யும் போது ஜிஎஸ்டியும் செலுத்தி இரட்டை வரிவிதிப்புக்கு உள்ளாவதாக கவலையில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மாத ஊதியதாரர்களுக்கு இனிப்பான செய்தி வர அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பழைய வரிவிதிப்பு முறையை நீக்கிவிட்டு, புதிய வருமான வரி விகித முறையில், வருமான வரி வரம்பை 10 லட்சம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Check here: Union Budget 2025 Live Updates
மேலும், சேமிப்புத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வழங்கப்படும் வரி விலக்கை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து சுமார் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஏழை, நடுத்தர மக்களை கடவுள் லட்சுமி ஆசீர்வதிக்கட்டும் எனக் கூறினார். இதன் மூலம், வருமான வரி விலக்கு அளிக்கப்பட இருப்பதை பிரதமர் மோடி சூசகமாக கூறினாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனுடன், மத்திய பட்ஜெட்டில், வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டி தொகையில் கூடுதல் வரி கழிவுகள் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பதும், முத்ரா கடன் திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிக்க: 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்
கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த 4 மாதங்களாக பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருவதால், பங்கு முதலீட்டாளர்கள், வர்த்தகர்களுக்கு சலுகைகளை அறிவிக்கவேண்டும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு கூடுதல் அறிவிப்புகள் இருக்கலாம் எனவும், மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கும் எனவும் கூறப்படுகிறது.
February 01, 2025 7:59 AM IST

