ஜாலான் இந்திராபுரா 17, பண்டார் இந்திராபுரா ஜெரான்டுட்டில் சனிக்கிழமை இரவு பெரோடுவா மைவி கார் சாலையோரம் இருந்த நாசிலெமாக் கடையை மோதி நொறுங்கியது. இதில் நாசிலெமாக் கடை உரிமையாளர் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினார். இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது ஜெரான்டுட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டென்ட் ஜூக்ரி முகமட் கூறினார். இந்த விபத்தில் தோள்பட்டையில் காயமடைந்த நாசிலெமாக் கடை உரிமையாளர் ஜெரான்டுட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.
கடைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இவருடைய பெரோடுவா வீவா காரையும் அந்த மைவி கார் மோதியிருக்கிறது. மைவி காரை செலுத்திய 22 வயது பெண்ணுக்கு திடீரென வலிப்பி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் வீவா காரை மோதி விட்டு நாசிலெமாக் கடைக்குள் புகுந்தது என்று கடை உரிமையாளர் ஜெரான்டுட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சொற்ப காயங்களுக்கு ஆளான கார் ஓட்டிய பெண் ஜெரான்டுட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் நிகழ்ந்த சமயம் கடையில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. நாசிலெமாக் வியாபாரி கடையை மூடுவதற்கு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் நிகழ்ந்தது.


