Last Updated:
Union Budget 2025: மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய அவர், “இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், வருமான வரி செலுத்துபவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், “வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. 63 ஆண்டுகால பழமையான வரி நடைமுறைகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. அந்தவகையில் அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கொண்டு வரப்பட உள்ள புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 2025 – 26 நிதி நிலை அறிக்கை தாக்கல் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
“அந்த புதிய வரி மசோதா வரி செலுத்துவோருக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கும்” எனவும் “புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும்” எனவும் அவர் அறிவித்தார்.
மேலும் மூத்த குடிமக்களுக்கான வருமான வரி பிடித்த உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கான TDS உச்சவரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
February 01, 2025 12:02 PM IST
Income Tax Bill | புதிய வருமான வரி மசோதா: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு – முழு விவரம் இதோ


