Last Updated:
இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ரூபசந்துருவை கைது செய்த காவல்துறையினர், குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் மாடலிங் பெண்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களைத் திருடி மார்பிங் செய்து மிரட்டிய தனியார் நிறுவன மேலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டே மாடலிங் செய்து வருகிறார். விதவிதமான போட்டோ ஷூட்கள் செய்து அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்து வந்துள்ளார். படிப்பு, மாடலிங் என வாழ்க்கையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த இளம்பெண்ணிற்கு திடீரென்று ஒரு நாள் பேரிடி விழுந்தது. அப்பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் ஒருவரின் இன்ஸ்டா ஐடியில் இருந்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. மார்பிங் செய்யப்பட்ட அந்த போட்டோவை பார்த்ததும் இளம்பெண் மிரண்டு போயுள்ளார். அந்த ஐடியை ப்ளாக் செய்வதற்குள் அடுத்த மெசேஜ் வந்தது.
அதில் ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து தன்னுடன் செல்போனில் பேச வேண்டுமென்றும், அல்லது வீடியோ காலில் வர வேண்டும் என்றும் மர்ம நபர் நிபந்தனை விதித்துள்ளார். அதற்கு ரிப்ளே அளிக்காமல் இருந்த பெண்ணிற்கு மேலும் ஒரு மெசேஜ் வந்துள்ளது. சொன்னதை செய்யாவிட்டால் ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை இன்ஸ்டா அக்கவுண்டை பின் தொடரும் அனைவருக்கும் அனுப்பி வைத்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த இளம்பெண், நிதானத்துடன் செயல்பட்டு ஆன்லைன் சைபர் க்ரைம் போலீசில் புகாரளித்தார்.
Also Read: சென்னையில் நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம் – ரத்த வெள்ளத்தில் சரிந்த குத்துச்சண்டை வீரர்!
இது தொடர்பாக இணையவழி காவல் நிலைய போலீசார் கடந்த நான்கு நாட்களாக விசாரணை மேற்கொண்டதில், பெண்ணிற்கு ஆபாச புகைப்படம் அனுப்பி மிரட்டல் விடுத்த ரூபசந்துரு என்பவரை செல்போன் ஐடி எண்ணை வைத்து கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்த ரூபசந்துரு, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார். அவருடைய செல்போனை ஆய்வு செய்தபோது 32-க்கும் மேற்பட்ட பெண்களின் போட்டோக்களை இன்ஸ்டாவில் இருந்து திருடி ஆபாசமாகச் சித்தரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போட்டோக்களை அவர்களுக்கே அனுப்பி மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ரூபசந்துருவை கைது செய்த காவல்துறை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து போட்டோக்களை திருடி ஆபாசமாக சித்தரித்து அனுப்பினால் அச்சமடையாமல் உடனே புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரளிக்காமல் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். மாடலிங் பெண்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து போட்டோக்களை திருடி மார்பிங் செய்து மிரட்டிய தனியார் நிறுவன மேலாளர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Puducherry (Pondicherry)
January 31, 2025 5:06 PM IST
மாடலிங் பெண்களின் புகைப்படங்களை திருடி மார்பிங்.. மிரட்டல்.. ஒருவர் கைது.. திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு!


