Last Updated:
ஸ்ரீராம் குழுமம், கடன் வழங்கும் துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உருவாவதற்கு முன்பு, ஆரம்ப காலங்களில் சிட் ஃபண்டுகளில் கவனம் செலுத்தி வந்தது.
ஸ்ரீராம் குழுமத்தின் இணை நிறுவனரான ஆர்.தியாகராஜன், இந்தியாவின் கடன் வழங்கல் மற்றும் காப்பீட்டுத் துறைகளில் மிகவும் முக்கியமானவர். ஸ்ரீராம் குழுமம் சென்னையை தளமாகக் கொண்ட மிகப்பெரிய நிதிச் சேவை வழங்கும் நிறுவனமாகும். 1974-ம் ஆண்டு ஏவிஎஸ் ராஜா மற்றும் டி ஜெயராமன் ஆகியோர் இணைந்து தொடங்கிய ஸ்ரீராம் குழுமம், கடன் வழங்கும் துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உருவாவதற்கு முன்பு, ஆரம்ப காலங்களில் சிட் ஃபண்டுகளில் கவனம் செலுத்தி வந்தது.
பாரம்பரிய வங்கிச் சேவைகள் கிடைக்காத குறைந்த வருமானம் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு எளிதாக கடன்களை வழங்குவதன் மூலம், ஸ்ரீராம் குழுமத்தை ரூ.87,000 கோடி மதிப்புள்ள வெற்றிகரமான நிறுவனமாக தியாகராஜன் உருவாக்கியுள்ளார். பல வெற்றிகரமான தொழில்முனைவோரைப் போலல்லாமல், ஆர்.தியாகராஜன் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகிறார். அவர் தனது சொத்தில் கணிசமான பகுதியை நன்கொடையாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இன்று வரை வெறும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை தான் ஓட்டிச் செல்கிறார். ஆடம்பர பங்களாக்களில் வசிக்காமல் எளிமையான வீட்டில்தான் வசித்து வருகிறார்.
ப்ளூம்பெர்க் செய்தி நிறூவனத்துடனான ஒரு நேர்காணலில், இதற்கு முன் ஒருமுறை கூட கடன் வாங்காத தனிநபர்களுக்கு கடன் வழங்குவது பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது என்பதை நிரூபிப்பதே நிறுவனத்தைத் தொடங்குவதற்கான தன்னுடைய உந்துதல் என்று விளக்கியுள்ளார். தற்போது, ஸ்ரீராம் குழுமம் சுமார் 1,00,000 நபர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும், பின்தங்கிய துறைகளாக கருதப்படும், குறிப்பாக லாரிகள் மற்றும் டிராக்டர்கள் போன்ற வாகனங்களுக்கு நிதியளிப்பதில் அதன் முன்னோடி முயற்சிகளுக்காக ஸ்ரீராம் குழுமம் பலராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உங்களுக்கு குறைவான கிரெடிட் ஸ்கோர் இருக்கா…? தனிநபர் கடனைப் பெற இந்த டிப்ஸ்களை ட்ரை பண்ணிப் பாருங்க…!
தமிழ்நாட்டில் ஒரு வளமான விவசாய குடும்பத்தில் பிறந்த ஆர்.தியாகராஜன், கணிதத்தில் பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1961-ம் ஆண்டு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் தனது கேரியரை தொடங்கிய தியாகராஜன், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு நிதி நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
இத்தனை வருடம் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு, தன்னுடைய 37 வயதில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற உந்துதலில் தொழில்முனைவோராக தனது பயணத்தை தொடங்கினார். இன்று, ஸ்ரீராம் குழுமம் பல்வேறு நிதித் துறைகளில் 30 நிறுவனங்களை உள்ளடக்கி மாபெரும் சாம்ராஜ்ஜியமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதன் பல்வேறு வகையான நிதி சேவைகள் மூலம் தற்போது 23 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.
இதையும் படிக்க: Union Budget 2025 | சாமானிய மக்களின் டாப் 5 எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் நிறைவேறுமா..?
தியாகராஜன் உதவி செய்வதில் தாராள குணம் படைத்தவர். தொண்டு சேவைகளுக்கு ரூ.6,210 கோடிக்கு மேல் பங்களித்துள்ளார். அதோடு தனது பங்குகளை விற்று, அதன் மூலம் கிடைத்த தொகையை ஊழியர் அறக்கட்டளைக்கு மாற்றியுள்ளார். எப்போதும் கவனம் மற்றும் எளிமையைப் பேணுவதில் நம்பிக்கை கொண்ட தியாகராஜன், செல்போனை கவனச் சிதறலாகக் கருதுவதால், இன்று வரை சொந்தமாக ஒரு மொபைல்போன் கூட பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்.
January 29, 2025 7:20 PM IST
30 நிறுவனங்களுக்கு உரிமையாளர்; ரூ.6,200 கோடியை நன்கொடையாக அளித்தவர்; ஆனால், செல்போன் கூட பயன்படுத்துவதில்லை…! யார் தெரியுமா..?


