Last Updated:
Budget 2025 | 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடைமுறையின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா விழா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு நடைமுறையின் இறுதிக் கட்டத்தைக் குறிக்கும் அல்வா விழா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 3-ஆவது ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்கு பின்னர் முதல் முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
நார்த் பிளாக்கில் நடைபெற்ற இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா விநியோகித்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அச்சிடும் அச்சகத்தை பார்வையிட்டு, தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அல்வா தயாரிக்கும் நிகழ்வு ஏன்?
பட்ஜெட் தயாரிக்கும் பணி ஆரம்பிப்பதற்கு முன்பாக எந்தவித தடங்கலும் இல்லாமல் இருப்பதற்காகவும், நல்லவிதமாக ஆரம்பிக்க வேண்டும் என்பதாலும், நிதியமைச்சராக இருப்பவர் அல்வா தயாரித்து அனைத்து ஊழியர்களுக்கும் விநியோகிப்பது வழக்கம். அதன் பிறகே பட்ஜெட் தயாரிக்கும் பணி சுறுசுறுப்பாக தொடங்கும். இந்தியாவில் எந்த ஒரு நல்ல வேலையைச் செய்வதற்கு முன் இனிப்புகளை சாப்பிடும் வழக்கம் தான் இதற்கான முக்கிய பின்னணியாக இருக்கலாம் என கூறப்படுகிரது. இதன் காரணமாகவே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் இந்த அல்வா விழா கொண்டாடப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் lock in செயல்முறை தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கலாவதற்கு 9 அல்லது 10 நாட்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சகத்தால் அல்வா தயாரிக்கும் விழா நடத்தப்படுகிறது.
அதிகாரிகள் வீட்டிற்கு செல்ல தடை
பட்ஜெட் தொடர்பான விஷயங்கள், தகவல்கள் வெளியே கசிந்துவிடாத வகையில், மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் வகையில், பட்ஜெட்டை தயாரித்த அதிகாரிகளும் நாடாளுமன்ற வளாகத்திலேயே தனி அறையில் பாதுகாக்கப்படுவர். அவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களை கூட பட்ஜெட் தாக்கல் வரை பார்க்க அனுமதி கிடையாது. உயர் அதிகாரிகள் முதல் சாதாரண கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் அலுவலக சிறை வைக்கப்பட்டதுபோல் நாடாளுமன்ற பட்ஜெட் தயாரிக்கும் பிரிவு கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடும். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிடும். பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
January 29, 2025 4:53 PM IST


