
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி என்ற மூன்று சாம்பியன் வீரர்களின் கேப்டன்சி பயணம் ஐபிஎல் தொடரில் முடிவுக்கு வந்துள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மாவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திர சிங் தோனியும் கேப்டன்சி பொறுப்பை ஹர்திக் பாண்டியா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துள்ளனர்.
விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் மகேந்திர சிங் தோனி என்ற மூன்று சாம்பியன் வீரர்களின் கேப்டன்சி பயணம் ஐபிஎல் தொடரில் முடிவுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு “புதிய ஐபிஎல் சீசனில், புதிய ரோலில் விளையாடவிருக்கிறேன்” என்று தோனி சமூகவலைதளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.
அதற்கேற்றார் போல் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தோனி இந்த முடிவை கடந்தாண்டே எடுத்தது போல் முதலில் பேசப்பட்டாலும், தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
கடந்தாண்டே தோனி கேப்டன்சி மாற்றம் குறித்து ஹிண்ட் கொடுத்தார் என்று தெரிவித்திருக்கும் ருதுராஜ், கேப்டனாக இருப்பதற்கு தகுதியான வீரர் என்று தோனி நம்பியதே தனக்கு பெரிய நம்பிக்கையை தருகிறது என்று கூறியுள்ளார்.
சிஎஸ்கே போன்ற சாம்பியன் அணிக்கு கேப்டனாக இருப்பதும், உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய தோனி போன்ற ஒரு வெற்றிகேப்டனுக்கு மாற்று கேப்டனாக இருப்பதும் சவால் நிறைந்தது என்று ருதுராஜ் தெரிவித்துள்ளார். இருப்பினும் களத்தில் முதுகெலும்பாக தோனியே இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

