
Last Updated:
Saif Ali Khan | பிடிபட்ட நபர் தன்னை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் வசித்து வந்த இடத்தில் நடத்திய சோதனையில் இந்தியர் என்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் புதிய திருப்பம் வெளிவந்துள்ளது.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாகக் கூறப்படும் நபர் மும்பை தானேவில் வைத்து கைது செய்தனர். சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசர்வதவல்லி என்ற இடத்தில் அந்த நபர் பிடிபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள புதர்களுக்குள் அவர் பதுங்கி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், 30 வயதான அந்த நபர் விஜய் தாஸ் என்ற பெயருடன், தானேவில் உள்ள பாரில் ஊழியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இந்த நபர் 5 மாதங்களுக்கு முன்புதான் மும்பைக்கு வந்திருக்கிறார். மும்பைக்கு வந்தவுடன் தனது பெயரை விஜய் தாஸ் என்று மாற்றிச் செய்யும் இடத்திலும், பிஜாய் தாஸ், முகமது இலியாஸ் என மற்ற இடங்களிலும் கூறி வந்துள்ளார். பிடிபட்ட நபர் தன்னை மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் வசித்து வந்த இடத்தில் நடத்திய சோதனையில் இந்தியர் என்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனால், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும், அவரது உண்மையான பெயர் முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் என்றும் ((Mohammad Shariful Islam Shahzad)) போலீசார் தெரிவித்தனர். பார் மட்டுமின்றி ஹவுஸ் கீப்பிங் ஏஜென்சியிலும் அந்த நபர் பணியாற்றி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் ஷரிஃபுல் இஸ்லாம் விவகாரத்தில் புதிய ட்விஸ்ட் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது, சைஃப் அலிகான் தனது வீட்டில் கொள்ளை மற்றும் தாக்குதல் நடந்த நாட்களில் சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில், குற்றம்சாட்டப்பட்ட ஷரிஃபுல் இஸ்லாமின் கைரேகை ஒத்துப்போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 19 செட் கைரேகைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒன்றில் கூட ஷரிஃபுல் இஸ்லாமின் கைரேகை ஒத்துப்போகவில்லையாம்.
மும்பை காவல்துறை சைஃப் அலி கானின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கைரேகைகளை மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் கைரேகை சரிபார்ப்பு மையத்துக்கு அனுப்பியுள்ளது. அதில் கிடைத்த முடிவு நெகட்டிவ் என வர அதிர்ச்சி அடைந்த மும்பை காவல்துறை தற்போது கூடுதல் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் தவறாக கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது கைரேகை விஷயத்தில் ட்விஸ்ட் நடந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai,Maharashtra
January 26, 2025 9:05 PM IST
Saif Ali Khan | கைரேகையில் காத்திருந்த ட்விஸ்ட்… சைஃப் அலிகான் வீடு கொள்ளை சம்பவத்தில் யார் உண்மையான குற்றவாளி?

