தேவாலயத்தில் நடந்தது என்ன?
பேராலயத்தில் நடந்த வழிபாட்டில் பிரசங்கத்தின்போது தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் வாழ்வுக்காகவும், குடியேறியவர்களுக்காகவும் பேசினார் மரியான் எட்கர் புடே.
வாஷிங்டன் தேசிய பேராலயத்தில் நடந்த வழிபாட்டில், “உங்களிடம் இறுதியாக ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன் மிஸ்டர் ப்ரெசிடெண்ட், மில்லியன் கணக்கான மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். சமீபமாக நாட்டுமக்களிடம் உரையாடிய நீங்கள், அன்பு நிறைந்த நம் கடவுளின் பாதுகாப்பு கரத்தை உணருவதாகத் தெரிவித்தீர்கள்.
கடவுளின் பெயரால் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நம் நாட்டு மக்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். இங்கு கே (Gay), லெஸ்பியன் (Lesbian) மற்றும் திருநங்கை குழந்தைகள் இருக்கின்றனர். ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சி மற்றும் சுதந்திரமான குடும்பங்களிலும் இருக்கும் அவர்கள் தங்கள் வாழ்க்கை குறித்த அச்சத்தில் உள்ளனர்.

நம் வயலில் பயிர்களை அறுப்பவர்கள், நம் அலுவலகங்களை சுத்தப்படுத்துபவர்கள், பண்ணைகளில் வேலை செய்பவர்கள், இறைச்சி உற்பத்தியில் பணியாற்றுபவர்கள், நாம் உணவகங்களில் சாப்பிட்ட பிறகு தட்டு கழுவுபவர்கள், மருத்துவமனைகளில் இரவு வேலை செய்பவர்களிடம் நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும். அவர்கள் அமெரிக்க குடிமக்களாக இல்லாமல் இருக்கலாம், உரிய ஆவணங்கள் வைத்திருக்காமல் இருக்கலாம்.
குடிபுகுந்தவர்களில் பெரும்பாலானோர் குற்றவாளிகள் அல்லர். அவர்கள் வரி கட்டுகின்றனர், நம் அண்டை வீடுகளில் வசிக்கின்றனர், நம் தேவாலயங்களில், மசூதிகளில், யூத ஜெப ஆலயங்களில், வதாராக்களில் மற்றும் கோவில்கலில் நம்பிக்கை மிக்க உறுப்பினர்களாக உள்ளனர்.
நம் சமூகத்தில் பெற்றோர்கள் நாடுகடத்தப்படுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நீங்கள் இரக்கம் காட்ட வேண்டும்.
தங்கள் தாய்நாட்டில் போர்களாலும் வன்முறைகளாலும் துன்பப்பட்டு பரிவையும் அரவணைப்பையும் நாடி இங்கு வருபவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.
நம் கடவுள் நாம் முன்பின் தெரியாதவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் எனக் கற்றுக்கொடுத்துள்ளார். நாம் எல்லாருமே ஒரு காலத்தில் இந்த மண்ணில் முன்பின் தெரியாதவர்களாக இருந்தவர்கள்தான்.” என்றார்.

