
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாப்பில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
இந்நிலையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இதுகுறித்து முறையிட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து புகார் அளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் மேலாளர் கலையரசி பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : பிரபாகரனின் அண்ணன் மகனை தகாத வார்த்தையில் திட்டிய சீமான்..? பெண் நிருபரிடம் ஆவேசம்
அவர் கூறியதாவது, “அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனை ஒருவர் ரெய்டு சென்றபோது, எதிர் அணியில் இருந்த தர்பங்கா பல்கலைக்கழக வீராங்கனையை பேக் கிக் செய்திருக்கிறார். உடனே தர்பங்கா பல்கலைக்கழக வீராங்கணை, அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனையை அடித்திருக்கிறார். பதிலுக்கு இவரும் அவரை அடித்திருக்கிறார்.
உடனே தர்பங்கா அணியில் இருந்த வீராங்கனைகள் அனைவரும் ஒன்றுகூடி, நம் வீராங்கனையை தாக்கியுள்ளனர். அப்படி நடந்ததும், நான், பயிற்சியாளர் பாண்டியராஜன், அணி உறுப்பினர்கள், பெரியார் பல்கலைக்கழக அணியினர், அழகப்பா பல்கலைக்கழக அணியினர் அனைவரும் சென்றோம். அப்போது அவர்கள் தரப்பிலும் அதிகபடியான ஆட்கள் கூடிவிட்டனர். பிறகு அங்கு ஒரு ஐந்து நிமிடம் பிரச்சனையாகிவிட்டது.
இந்த சம்பவம் நடந்ததும், அங்கு இருந்தவர்கள் சுமார் நான்கு பேர் பயிற்சியாளர் பாண்டியராஜனின் சட்டை பிடித்து, அவரை ஒரு அறைக்கு இழுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து அறையினுள் இருவர் பாண்டியராஜனை பின் பக்கமாக பிடித்துக்கொண்டனர். மற்ற இருவரும் அவரை தாக்கியுள்ளனர். நாங்கள் அந்த அறையின் வெளியே இருந்து கூச்சலிட்டதும், அவர்கள் பாண்டியராஜனை விட்டுவிட்டனர். பிறகு நான் பாண்டியராஜன், வீராங்கனை உள்ளிட்ட அனைவரையும் தனியாக அழைத்துவந்து சமாதானம் செய்தேன்.
அதன்பிறகு அங்கு வந்த காவல்துறையினர் பாண்டியராஜனை அழைத்து சென்றுவிட்டனர். உடனடியாக நான் இந்த விவகாரத்தை பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்தேன். உடனே சுமார் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், நமது துணை முதல்வரும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அதன்பிறகு காவல்துறையிடமும் பேசினர். மேலும், எங்களுக்கு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து கொடுத்தனர். தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு விடுதியில் நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். அங்கிருந்து தமிழ்நாடு வருகிறோம்.
இந்தப் பிரச்சனையின் முக்கிய காரணம், தென் இந்திய அணிகள் வெல்ல கூடாது என அவர்கள் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது” என்று தெரிவித்தார்.
January 24, 2025 6:29 PM IST

