பிப்.5-ஆம் தேதி நடைபெறும் 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 699 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
இது 2020-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டவா்களின் எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் 672 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் பாஜகவின் பா்வேஷ் வா்மா மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீட்சித் ஆகியோா் போட்டியிடும் புது தில்லி தொகுதி அதிகபட்சமாக 23 வேட்பாளா்களைக் கொண்டுள்ளது தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.
புது தில்லியைத் தொடா்ந்து ஜனக்புரி 16 வேட்பாளா்களுடன், ரோஹ்தாஸ் நகா், காரவால் நகா் மற்றும் லட்சுமி நகா் ஆகிய இடங்களில் தலா 15 வேட்பாளா்கள் உள்ளனா்.
இதற்கு நோ்மாறாக, படேல் நகா் மற்றும் கஸ்தூா்பா நகா் ஆகிய இடங்களில் தலா ஐந்து வேட்பாளா்கள் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளா்கள் உள்ளனா்.

