தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத் தான் உள்ளது. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. வழக்கம் போலவே பொங்கல் திருநாளுக்கு முன்பாக, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமான வசனங்களுடன் தமிழக அரசிடமிருந்து அறிக்கை வந்தது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த எண்களை தொடர்பு கொண்டால், ‘’ நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை.அதனால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்’’ என்று மட்டுமே பதில் கிடைத்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

