
Last Updated:
பொதுவாக வைரஸ் பாதிக்கப்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குப் பிறகு தோன்றும். சிலருக்கு அறிகுறிகள் தோன்ற ஒன்று முதல் இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் HMPV வைரஸால் பீதியடைந்துள்ளது. சீனாவில் ஏற்கனவே இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் ஆனது சீனாவில் இருந்து இந்தியாவிலும் பரவி வருகிறது. இதுவரை நம் நாட்டில் ஏழு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. HMPV பாதிப்புகள் பதிவாகியுள்ளதால், மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், கோவிட் தொற்றுநோய்களின் போது முக்கிய பங்காற்றிய எய்ம்ஸ் முன்னாள் தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா, HMPV வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது அதிகரித்து வரும் சுவாச நோயான ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) சிகிச்சைக்கு ஆன்டிபையோட்டிக்ஸ் தேவையில்லை என்று டாக்டர் குலேரியா கூறியுள்ளார். மக்கள் சரியான நீரேற்றத்துடன் இருக்கவும், சத்தான உணவை சாப்பிடவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வைரஸ்கள் பொதுவாக லேசான அறிகுறியை ஏற்படுத்தும். ஆனால், வயதுக்கு ஏற்ப, அதாவது பச்சிளம் குழந்தைகள், சிறு குழந்தைகள், முதியவர்கள் அல்லது கொமொர்பிடிட்டிஸ் உள்ளவர்களுக்கு நிமோனியாவை ஏற்படுத்தும். தவிர இளம் வயதினருக்கும், முதியவர்களுக்கும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் டாக்டர் குலேரியா கூறியுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் மருந்து சாப்பிடுங்கள், நீரேற்றமாக இருங்கள், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். நோய் பரவுவதைத் தடுக்க மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் டாக்டர் குலேரியா கேட்டுக் கொண்டார். காய்ச்சலையும், வலியையும் குறைக்க நீரேற்றமாக இருக்க வேண்டும் மற்றும் பாராசிட்டமால் அல்லது ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும். உங்களுக்கு இருமல், சளி போன்ற வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் ஆன்டி-அலர்ஜிக் மருந்தை எடுத்துக் கொள்ளவும். ஏனென்றால் தற்போது இந்த வைரஸைத் தடுக்க குறிப்பிட்ட தடுப்பு மருந்து எதுவும் இல்லை.
ஆன்டிபையோட்டிக்ஸ் எடுத்துக் கொள்வதால் எந்தவிதமான விளைவையும் இது ஏற்படுத்தாது. ஏனெனில் இது ஒரு வைரஸ் தொற்று என்றும் டாக்டர் குலேரியா கூறியுள்ளார். எனவே மக்களிடையே தொற்றுநோய்க்கான கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அடிக்கடி இருமல், ரன்னிங் அல்லது மூக்கில் அடைப்பு, காய்ச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். நோயின் தீவிரம் அதிகமாகும்போது, குறிப்பாக கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளும் ஏற்படும். இந்த அறிகுறிகள் ஆனது பொதுவாக வைரஸ் பாதிக்கப்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குப் பிறகு தோன்றும். சிலருக்கு அறிகுறிகள் தோன்ற ஒன்று முதல் இரண்டு வாரங்கள் கூட ஆகலாம்.
HMPV தடுப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் தேவை. சோப்பு போட்டு அடிக்கடி கைகளை கழுவுதல், நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களை தொடர்ந்து சுத்தம் செய்வது ஆகியவை வைரஸ் பரவும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கின்றன. இது தவிர இருமல் மற்றும் தும்மல் வரும் போது, டவல்கள் மூலம் வாயை மூடுவது மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது வீட்டிலேயே இருப்பது போன்ற நடவடிக்கைகளானது வைரஸ் பரவாமல் தடுக்க உதவும்.
January 17, 2025 4:43 PM IST

