
Last Updated:
பட்டப்பகலில் பலர் நடமாடும் டவுன் பகுதியில், ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களை சுட்டுத் தள்ளிவிட்டு பணப் பெட்டியை கொலையாளிகள் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்.
கர்நாடகா மாநிலம், பீதர் நகரில் சிவாஜி சவுக் என்ற பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த நகரின் மையப்பகுதியாகும். இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக சிஎம்எஸ் ஏஜென்சியின் ஊழியர்கள் கிரிவெங்கடேஷ் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவர் வாகனத்தில் வந்துள்ளனர்.
சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் பணப்பெட்டியை எடுக்க முயன்றனர். அப்போது கருப்பு ஜாக்கெட் மற்றும் தொப்பி அணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு வந்தனர். பைக்கில் வந்திறங்கிய அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏடிஎம் ஊழியர்கள் இருவரின் கண்களிலும் மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளனர்.
இதில் ஊழியர்கள் இருவரும் நிலைகுலைந்து போய் அலறித் துடிக்க, அந்தக் கேப்பில் கைத்துப்பாக்கியை எடுத்த கொள்ளையர்கள், அவர்கள் இருவரையும் சரமாரியாக சுட்டுத் தள்ள ஆரம்பித்தனர். அருகில் இருந்தவர்கள் இந்த காட்சியைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு தெறித்து ஓடினர்.
சுமார் 6 ரவுண்டுகள் அடுத்தடுத்து சுட, இரண்டு ஊழியர்கள் உடலிலும் தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதையடுத்து அவர்களிடமிருந்த பணப்பெட்டியை கொள்ளையர்களில் ஒருவர் தூக்க முடியாமல் தூக்கிச் சென்றார். மற்றொருவர் பைக்கில் அமர்ந்திருக்க. பணப்பெட்டியை தூக்கிச் சென்று பைக்கின் முன்பகுதியில் வைத்துள்ளார்.
பின் இருவரும் பைக்கை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு பணத்துடன் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்ததால் யாரும் அருகில் செல்ல துணியவில்லை. ஆனால், ஒரு சிலர் கற்களை வீசி எறிந்து அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்தக் கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பணம் நிரப்பும் ஊழியரான கிரி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு ஊழியரான சிவக்குமார் உயிருக்குப் போராடிய நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. பிரதீப் குண்டே வங்கி ஏடிஎம்மின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சுமார் 90 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
January 16, 2025 9:47 PM IST

