
Last Updated:
ISRO | ஸ்பேட்எக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் மூலம் இரு செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன.
ஸ்பேட்எக்ஸ் செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் இணைத்துள்ளது.
விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனைக்காக இஸ்ரோ 2 செயற்கைக் கோள்களை வடிவமைத்தது. அதற்கு ‘சேசர்’ (ஸ்பேட்எக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேட்எக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220 கிலோ எடை கொண்ட இதை, விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இதற்காக, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு கடந்த 30-ஆம் தேதி விண்ணில் பாய்ந்தது. இதை தொடர்ந்து இரு செயற்கைக்கோள்களும் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் திட்டமிட்டப்படி இலக்கில் நிலை நிலைநிறுத்தப்பட்டது.
பெருமை
இந்நிலையில் ஸ்பேட்எக்ஸ் ஏ, ஸ்பேட்எக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ செய்தது. அதன்படி இரு செயற்கைக்கோள்கள் இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டு, பின்னர் 3 மீட்டராக குறைக்கப்பட்டது. இதற்கிடையே இரண்டையும் இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஸ்பேட்எக்ஸ் திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் மூலம் இரு செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன.
இதனால், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து, இதனை மேற்கொள்ளும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. டாக்கிங் பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது என்றும், இது ஒரு வரலாற்று தருணம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
January 16, 2025 12:31 PM IST
ISRO: விண்ணில் வெற்றிகரமாக ஸ்பேட்எக்ஸ் செயற்கைக்கோள்களை இணைத்த இஸ்ரோ.. இந்தியாவிற்கு கிடைத்த பெருமை!

