
நாட்டின் கடற்படையில் ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்சீர் ஆகிய மூன்று போர் கப்பல்கள் இணைக்கப்பட்டிருப்பது, பாதுகாப்புத் தளவாட உள்நாட்டு உற்பத்தியிலும், கடற்படை பாதுகாப்பிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் திறன்கொண்ட போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கும் வகையில் ஒரே நேரத்தில் கப்பற்படையில் இணைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மூன்று போர் கப்பல்களுமே உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதால், அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு, வரலாற்று சிறப்பு மிக்கதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதில், ஐஎன்எஸ் சூரத், போர்க்கப்பல் கட்டும் திட்டம் 15ன் கீழ் உருவாக்கப்பட்ட நான்காவது மற்றும் இறுதியான கப்பல் ஆகும்.
75 சதவீதம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த போர் கப்பல், உலகின் மிகப்பெரிய மற்றும் அதி நவீன வசதிகளுடன் கூடிய ஏவுகணை அழிப்பான் ஆகும். ஆயுத சென்சார் அமைப்புகள், மேம்பட்ட நெட்வொர்க் அமைப்புகள் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலின் கூடுதல் பலமாக கூறப்படுகிறது.
இதேபோல், போர்க்கப்பல் கட்டும் திட்டம் 17ஏ படி தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஐஎன்எஸ் நீலகிரி. ஷிவாலிக் வகையைச் சேர்ந்த போர் கப்பல்களைக் காட்டிலும் நவீன தொழில்நுட்பங்கள், ஐஎன்எஸ் நீலகிரியில் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படை வீரர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழில்நுட்பம், கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்வது, அதேவேளையில், ரகசியமான கண்காணிப்புகளை மேற்கொள்வது உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது.
ஐஎன்எஸ் நீலகிரியின் ரகசியத் தன்மைக்கும் ரேடார் வலையில் சிக்காமல் தப்பிக்கும் தன்மைக்கும் Stealth Frigate கட்டமைப்பு, முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நவீன விமான இயங்குதள வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த போர் கப்பலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்எச்-60ஆர் உள்பட பல வகை ஹெலிகாப்டர்களை இயக்க முடியும்.
Also Read | முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை அதிரடி!
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மஸாகன் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி, அடுத்த தலைமுறை உள்நாட்டு போர் கப்பல்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதற்கு அடுத்தப்படியாக ஐஎன்எஸ் வாக்சீர் போர்க்கப்பல். இது 75 ஸ்கார்பீயன் திட்டத்தின் ஒருபகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஏற்கனவே 5 போர் கப்பல்கள் உருவாக்கப்பட்ட நிலையில் இது 6வது மற்றும் கடைசி கப்பலாகும்.
இது நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை மற்றும் பிரான்ஸ் கடற்படை இணைந்து தயாரித்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
January 15, 2025 7:39 PM IST
ரேடாரில் கூட சிக்காது.. எதிரிகளுக்கோ சிம்ம சொப்பணம்.. கடற்படையை வேற லெவலுக்கு மாற்றும் புதிய வரவுகள்!

