
Last Updated:
உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்ப மேளாவில் இரண்டு நாட்களில் 5 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், மகா கும்ப மேளா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்கள் என கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். மகா கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டனர்.
முதல் நாளில் ஒரு கோடியே 60 லட்சம் பேர் புனித நீராடிய நிலையில் மகர சங்கராந்தி தினமான நேற்று 3 கோடியே 50 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். அடுத்த மாதம் 26-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு பிரமாண்டமாக கும்ப மேளா நடைபெற உள்ளது. இதில், சுமார் 50 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3-ஆவது நாள் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கும்ப மேளாவில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் மனைவி லாரன் போவல் ஜாப்ஸ் கலந்து கொண்டார். இந்நிலையில், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கூட்டம் அதிகமாக இருக்கும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்றதில்லை என்றும், அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
January 15, 2025 10:26 AM IST

