
Last Updated:
டெல்லியில் அமைந்துள்ள நரைனா என்ற பகுதியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் சில காஸ்டலியான எலெக்ட்ரானிக் பொருட்களை திருடியதாக கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை சமீபத்தில் டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
டெல்லியில் அமைந்துள்ள நரைனா என்ற பகுதியில் உள்ள ஒரு பைக் ஷோரூமில் இருந்து ரூ.6 லட்சம் ரொக்கம் மற்றும் சில காஸ்டலியான எலெக்ட்ரானிக் பொருட்களை திருடியதாக கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை சமீபத்தில் டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.
லூதியானாவை சேர்ந்த ஹசன் கான் என்ற இளைஞர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்தத் திருட்டை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஹசன் கானிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான ரொக்கத்தையும், 2 விலையுயர்ந்த கேமராக்களையும் போலீசார் மீட்டுள்ளனர். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக தான் திருடிய ஷோரூமில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுநரான ஹசன் கான், தனக்கு ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரின் சம்பள உயர்வு கோரிக்கையை குறிப்பிட்ட பைக் ஷோரூம் நிர்வாகம் நிராகரித்ததை அடுத்து, அவர்களை பழிவாங்க திருட்டை திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படுகிறது. காவல்துறை விசாரணையில், கான் எப்படித் திருட்டைத் திட்டமிட்டார் என்பது பற்றிய விவரங்கள் வெளிவந்தன. திருடியது தான் என்ற அடையாளம் தெரியாமல் இருக்க, அவர் ஷோரூம் விளக்குகளை அணைத்துவிட்டு, பாதுகாப்பு கேமராக்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட்டையும் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
திருட்டு சம்பவம் குறித்து பைக் ஷோரூம் நிர்வாக அளித்த புகாரைப் பெற்ற பிறகு, காவல்துறையினரின் விசாரணைக் குழு ஷோரூமைச் சுற்றியுள்ள பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது, குறிப்பிட்ட ஷோரூமில் வேலைபார்த்து வரும் பிற ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தீவிர விசாரணையின் முடிவில் இறுதியாக ஹசன்கான் தான் சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்து உரிய முறையில் விசாரித்த போது அவர் திருடிய குற்றத்தை ஒப்பு கொண்டதாகவும், பின்னர் அவரிடமிருந்து திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர். பைக் ஷோரூம் நிர்வாகம் தனது சம்பளத்தை உயர்த்த மறுத்ததால் விரக்தியடைந்ததாகவும், இதனை தொடர்ந்தே இந்த திருட்டில் ஈடுப்பட்டதாகவும் விசாரணையில் ஹசன் கான் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு சென்னையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தான் முன்பு வேலைபார்த்து வந்த வீட்டிலிருந்து காஸ்டலியான பொருட்களை திருடியதாகக் கூறி 35 வயது நபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அசோக் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் சம்பந்தப்பட்டார், இவர் ஆர்.ஏ. புரத்தைச் சேர்ந்த பங்குச் சந்தை வர்த்தகர் எல். கோபாலகிருஷ்ணன் வீட்டில் பணியாற்றினார். எனினும் சரவணனின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை கண்டு வேலையை விட்டு அவரை நிறுத்தினர். சரவணன் சென்ற பிறகு, தனது லாக்கரின் சாவி காணாமல் போனதை கோபாலகிருஷ்ணன் கவனித்தார். இறுதியாக அதை திறந்து பார்த்த போது 250 சவரன் தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். புகாரைத் தொடர்ந்து, போலீசார் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
January 13, 2025 6:01 PM IST
சம்பளத்தை உயர்த்தி கொடுக்காததால் விரக்தி.. பணியிடத்தில் ஊழியர் செய்த அதிர்ச்சி செயல்! – என்ன நடந்தது?

