பொருள் சேதம் அதிகம்;ஆனால், உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
மனிதர்கள்மேல் மட்டும்தான் நம் பார்வை உள்ளன. காட்டு விலங்குகளின் நிலையை உணர்த்தும் குறும்படங்கள் நெஞ்சைக் கலங்கடிக்கத்தான் செய்கின்றன. கலிபோர்னியாவின் வனப் பகுதியில் நிறையக் கரடிகள், மான்கள், நரிகள் உண்டு. இவைகளும் பிற விலங்குகளும் பறவைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தில் இதுவரை சுமார் 75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாம். அதாவது இந்தத் தொகையை இந்த மாநிலம் ஈட்ட சுமார் 21 ஆண்டுகள் எடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், ஒரு சந்தோசமான செய்தி என்னவென்றால், உயிரிழப்புக்கள் பெரிதும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளன. இவ்வளவு பெரிய தீ விபத்தில் இதுவரை இறந்தவர்கள் 12 பேர்.
12 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். அடுத்து சில மணி நேரங்களில் 2 லட்ச மக்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் படுவார்கள். இதனைப் பார்க்க ஒரு போர்க்களத்தை விடப் படு பயங்கரமாக உள்ளது.
கலிபோர்னியாவில் நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகம். அதனால் இங்கு வீடுகள் பெரும்பாலும் மரங்களினாலேயே கட்டப்படுகின்றன. இந்தத் தீ வேகமாகப் பரவ மரவீடுகள் நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுக்கின்றது. மேலும், இங்கு உள்ள சாலைகள் பெரும்பாலும் சிமெண்டால் கட்டப்பட்டவை. தார்ச் சாலைகள் இங்கு அதிகம் இல்லை. அதனால் பெரிய சாலைகள் தப்பின. போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படவில்லை.
மக்கள் தங்கள் வீட்டின் மேல் தண்ணீர் பீச்சி அடித்து வருகின்றனர். எங்கிருந்தோ பறந்து வரும் தீக் கங்கால் வீட்டில் நெருப்பு பற்ற வாய்ப்புள்ளது. எனவே தண்ணீரில் தங்கள் வீடுகளை மக்கள் நனைத்தும் வருகின்றனர்.
பரந்து வரும் தீக்கங்குகள் சுமார் 7.5 கிலோமீட்டர் தூரம் வரைப் பயணித்து தீயை வேறு இடத்தில் பற்றவைக்க முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.
சில மக்கள் இந்தத் தீவிபத்து இயற்கையானது இல்லையென கூறுகின்றனர்.
சக்திவாய்ந்த லேசர் கதிர்களால் இந்தத் தீவிபத்து ஏற்படுத்தப் பட்டுள்ளன எனச் சிலர் சந்தேகத்துடன் கூறுகின்றனர்.
சில விசமிகள் தீயைப் பற்றவைத்துக் கொண்டுள்ளனர் எனவும் சிலர் கூறுகின்றனர்.
சிலர் இதனைப் பயன்படுத்தி வீடுகளிலும் கடைகளிலும் கொள்ளை அடித்தும் வருகின்றனர். இப்படிப் பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பலர் கைதாகியும் உள்ளனர்.
உலகின் பிற பகுதிகளில் அமெரிக்க இராணுவம் மற்றும் ஆயுதங்கள் வைத்து அழித்த இடங்களையும் இன்று எரிந்து கொண்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் இணைத்தும் இணையதளத்தில் பேசியும் வருகின்றனர்.

