
சேலம் மாவட்டத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே ஒரு அமைதியான சூழலில் வாழ்ந்து வந்த 50 வயதான மல்லிகாவின் வாழ்க்கை, திருப்பதியில் நூற்றுக்கணக்கானோர் கதறல்களுக்கும், கூட்ட நெரிசலுக்கும் இடையே சிக்கி நசுங்கி முடிவடைந்துள்ளது.
மேச்சேரி அடுத்த காவிரிதாசனூரைச் சேர்ந்தவர் 55 வயதான கிருஷ்ணன். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த மல்லிகாவை 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் வரன் பார்க்கும் தொழிலை மல்லிகாவும், பேரூராட்சி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் திறக்கும் தற்காலிக பணியாளராக கிருஷ்ணனும் பணியாற்றி தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளனர்.
இதையும் படிக்க: 20 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீடு.. ஃபிரிட்ஜிக்குள் இருந்த மனித எலும்புக்கூடுகள்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட மல்லிகா, மாதத்துக்கு ஒரு முறையாவது திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று மனம் உருக வழிபாடு செய்துவிட்டு வருவதை பழக்கமாக வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம்போல், வைகுண்ட ஏகாதசியன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக தங்கள் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் 15 பேருடன் ரயில் மூலம் சென்றுள்ளனர் கிருஷ்ணன் – மல்லிகா தம்பதி.
அப்போது, பைராகிபட்டேடையில் அமைக்கப்பட்ட மையத்தில் இலவச டிக்கெட் வாங்குவதற்காக சென்றபோதுதான், கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி முதல் பலியாய் மல்லிகாவின் உயிர் பறிபோனது.
விவாகரத்து பெற்று சென்றுவிட்ட முதல் 2 மனைவிகளின் குழந்தைகளும் உயிரிழந்துவிட்ட நிலையில், மனைவியையும் இழந்து நிர்கதியாய் நிற்பதாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார் கிருஷ்ணன்.
கூட்ட நெரிசல் காவல்துறையின் கைமீறுவதை உணர்ந்து முன்பே அங்கிருந்து நகர்ந்திருந்தால் ஒரு உயிரை இழந்திருக்க நேரிட்டிருக்காது என்பதே காவிரிதாசனூர் மக்களின் வேதனையாகவும் உள்ளது.
இந்த நிலையில் திருப்பதியில் நெரிசல் ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த டிஎஸ்பி ரமண குமார் மற்றும் அந்த பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த தேவஸ்தான அதிகாரி ஹரிநாத ரெட்டி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், திருப்பதி எஸ்பி சுப்பராயுடு, தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி கவுதமி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தனிநீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவியும், தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் சந்திரபாபு அறிவித்தார்.
Tirupati NMA,Chittoor,Andhra Pradesh
January 10, 2025 8:12 AM IST

