
Last Updated:
போலீசார் பங்களாவுக்குள் புகுந்து ஆய்வு செய்தபோது திகிலில் உறைந்து போயினர்.
கேரளாவில் 20 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் மண்டை ஓடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் போலீசாரை திகிலில் உறைய வைத்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியின் சோட்டானிக்கரை எருவேலி பகுதியில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான இடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த இடத்தில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் பிலிப் ஜான் என்பவருக்கு சொந்தமாக கைவிடப்பட்ட பங்களா ஒன்று அமைந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக இந்த பங்களாவில் யாரும் வசிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாழடைந்து காணப்பட்ட அந்த பங்களா நாளடைவில் அப்பகுதி மக்களை திகிலூட்டும் பகுதியாக மாறியிருக்கிறது.
தனித்து விடப்பட்ட அந்த பங்களா வீடு கடந்த சில ஆண்டுகளாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அப்பகுதி பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் புகார் அளிக்க, அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் பங்களாவுக்குள் புகுந்து ஆய்வு செய்தபோது திகிலில் உறைந்து போயினர். 20 வருடங்களாக அழுக்கடைந்த பங்களாவில் உடைந்த நிலையில் காணப்பட்ட குளிர்சாதனப் பெட்டி தான் போலீசாரின் அந்த திகிலுக்கு காரணம். அந்த குளிர்சாதனப் பெட்டியின் கம்பரசரை யாரோ கழற்றி சென்றிருந்தனர். ஏதேச்சையாக அந்த ஃபிரிட்ஜை திறந்து பார்க்க உள்ளே ஒரு மனித மண்டை ஓடி எட்டிப் பார்த்துள்ளது.
இதனை பார்த்து மிரண்டுபோன போலீசார் திகில் திரைப்படத்தை பார்த்தது போல் மிரண்டு போய் பின் வாங்கினர். அதன் பின் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்ததில் மண்டை ஓடு மட்டுமின்றி முதுகெலும்புகள் என 3 பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனி எச்சங்களை மீட்டுள்ளனர். அவற்றை கைப்பற்றி ஆய்வக சோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர். மனித எலும்புக் கூடுகளின் வயது இன்னும் போலீசாரால் தீர்மானிக்கப்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நபரின் மண்டை ஓடு என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் சோட்டானிக்கரை எஸ்.எச்.ஓ., தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வளாகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். வீட்டின் உரிமையாளரான மருத்துவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் கிடைக்கும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து கேரளாவில் தனித்து விடப்பட்ட வீடுகளிலும், மனித நடமாட்டமின்றி காணப்படும் கட்டடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
January 09, 2025 7:51 PM IST
20 ஆண்டுகளாக பூட்டியிருந்த வீடு.. ஃபிரிட்ஜிக்குள் இருந்த மனித எலும்புக்கூடுகள்.. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

