Last Updated:
Arjuna Award| கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அர்ஜுனா விருது விருதை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக நெகிழ்ச்சி.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் – விஜி தம்பதியினரின் மகள் துளசிமதிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்தக் குடும்பத்தையே நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் 3 ஆம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரைப் பாராட்டி தமிழக முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்குப் பரிசு வழங்கினர். இந்நிலையில் மத்திய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் துளசிமதி அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு துளசிமதிக்கு அர்ஜுனா விருதை வழங்க உள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நிலையில், தனியார் பயிற்சி மையத்திற்குச் சென்று பேட்மிண்டன் பயிற்சி பெற முடியாமல், எனது தந்தையின் 13 ஆண்டுகால ஊக்குவிப்பால் பயிற்சி பெற்றேன் என அர்ஜூனா விருதுக்குத் தகுதி பெற்ற துளசிமதி தெரிவித்தார். சிறு வயதில் விளையாட்டு வீரர்கள் இதுபோன்ற விருதுகளைப் பெறுவதைத் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன் என்றும் தற்போது தனக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமை அளிப்பதாக விருது குறித்து மகிழ்ச்சி பொங்க துளசிமதி தெரிவித்தார்.
பாரா ஒலிம்பிக் போட்டி நேரத்தில் விடுமுறை வாங்கித் தந்து பயிற்சியை மேற்கொள்ள உறுதுணையாக இருந்த அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அதனால் தான் தரமான பயிற்சி பெற்று வெற்றி பெற முடிந்ததாக துளசிமதி தெரிவித்தார். தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விருதைத் தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகவும் நெகிழ்ச்சி பொங்க துளசிமதி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 09, 2025 12:04 PM IST

