
Last Updated:
பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து இதில் ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் எட்டு பேரும், கார் ஓட்டுநர் ஒருவரும் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம், அபுஜ்மத் பகுதியில் இன்று காலை மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், இரு பெண் மாவோயிஸ்ட்கள் உட்பட மொத்தம் ஐந்து மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அவர்களிடம் இருந்து பாதுகாப்புப் படை வீரர்கள், ஏ.கே. 47 உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். இந்த தாக்குதல் சம்பவத்தை முடித்துவிட்டு பிறகு பாதுகாப்பு படையினர் பிஜ்புர் மாவட்டத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்தனர்.
பிற்பகல் 2.15 மணிக்கு பிஜ்புர் மாவட்டத்தில் பஸ்தர் பகுதியில், குத்ரு எனும் இடத்தில் வந்த பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து வாகனம் வானில் பறந்து சுக்குநூறாக சிதறி விழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு வந்த பாதுகாப்பு படை வீரர்களும், போலீஸாரும் தாக்குதலில் பலியான பாதுகாப்புப் படை வீரர்களின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மாவோயிஸ்ட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த எட்டு வீரர்கள் ஸ்கார்பியோ எஸ்.யு.வி. காரில் வந்துள்ளனர். இவர்கள் வந்த காரை ஓட்டுநர் ஒருவர் ஓட்டியுள்ளார். சம்பவ இடத்தில் ஆய்வு செய்தபோது, சம்பவம் நடந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்துப் பார்க்கும்போது மிகவும் சக்திவாய்ந்த வெடியை வைத்து தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிகிறது என்று தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
January 06, 2025 5:21 PM IST

