
Last Updated:
சீனாவில் பரவும் HMPV வைரஸ் புதுவகை தொற்றா, இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர் விளக்கியுள்ளார்.
2020ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவியது. இந்த வைரஸ் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இறந்தனர். பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகை பெரிய அளவில் அச்சுறுத்தியது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கமும் வீரியமும் குறைந்து உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
தற்போது மீண்டும் சீனாவில் HMPV புதுவகை வைரஸ் அதிகளவில் பரவிவருவதாக செய்திகள் வருகின்றன.
இந்த வைரஸ் என்ன, இது மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என டெல்லியில் மருத்துவர் சரத் ஜோஷி விளக்கியுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, “HMPV புது வகை வைரஸ் கிடையாது. அதேசமயம், இதன் மாறுபாடு கொண்டது தற்போது சீனாவில் வந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
HMPV பாதிப்பு கொண்டவர்கள் என்னிடமே தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த இரு மாதங்களாக இன்ஃப்ளூயன்ஸா ஏ, இன்ஃப்ளூயன்ஸா பி மற்றும் எச்3என்2 போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்டு மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்கள் யாருக்கும் மோசமான நிலை ஏற்படவில்லை.
அனைத்து நோயாளிகளும் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் வைரஸ் இதயத்தை பாதித்தது. இதனால் நோயாளிகளை ஐசியூவில் சேர்க்க வேண்டியதாயிற்று. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நோயாளிகள் வைரஸிலிருந்து விரைவாக குணமடைந்து ஆரோக்கியமாக வீடு திரும்புகின்றனர்.
HMPV-ன் உருமாற்றம் பெற்ற வைரஸால் இதுவரை யாரும் இங்கு பாதிக்கப்படவில்லை. வழக்கமான HMPV மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாதிக்கப்பட்டே மக்கள் வருகின்றனர். அவர்களும் சிகிச்சை முடிந்து கிளம்புகிறார்கள். குளிர் அதிகளவில் இருப்பதால், வெயில் இல்லாத காரணத்தாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
அனைத்து வைரஸ்களும் நுரையீரல் அல்லது சுவாசத்துடன் தொடர்புடையவை. அவை அனைத்தின் முதல் அறிகுறி மூக்கு அடைப்பு, தொண்டை அடைப்பு, இருமல் அல்லது தும்மல், உடலில் காய்ச்சல், சோர்வு போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். கொரோனாவில், சுவை வாசனையை மக்களால் கண்டறிய முடியவில்லை. ஆனால், தற்போது இது போன்ற அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை” என்று தெரிவித்தார்.
January 03, 2025 9:21 PM IST

