
Last Updated:
மீட்பு நடவடிக்கையில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் இருந்து மெட்ரோ சுரங்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை, மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
குழந்தையை மீட்பதற்கு 5 முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு 6 ஆவது முறையாக முயன்று மீட்பு குழுவினர் குழந்தை சேத்னாவை மீட்டனர். இதன்பின்னர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். .
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி மாவட்டத்தில் உள்ள கிராத்புரா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சேத்னா அங்கிருந்த 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
10 நிமிடங்களுக்கு பின்னர் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. மீட்பு நடவடிக்கையில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் பகுதிகளில் இருந்து மெட்ரோ சுரங்க நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
சிறுமிக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு, அவரை மேலே இழுக்கும் ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் தோண்டத் தொடங்கினர். 5 கட்டமாக பல்வேறு முறைகளில் மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று சிறுமி சேத்னா மீட்கப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
January 02, 2025 7:02 AM IST
தொடரும் ஆழ்துளை கிணறு மரணங்கள்: 3 வயது குழந்தை 10 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு – புத்தாண்டு தினத்தில் சோகம்!

