
டிசம்பர் 27, 2024 அன்று பேஸ்புக் யூசர் ஒருவர் ஒரு வீடியோவைப் பதிவேற்றி, “திருப்பதி திம்மப்பாவுக்கு சேவை செய்யும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது எவ்வளவு பணம், தங்க ஆபரணங்கள் மற்றும் வைரங்கள் கிடைத்தன என்று உங்களுக்குத் தெரியுமா? 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் இருந்துள்ளது. கடவுளுக்குத் தங்கம், பணம், வைரம் தேவையா? ஒருவரின் வீட்டிலேயே இவ்வளவு பணம், தங்கம், வைரம் கிடைத்தால், மீதியுள்ள 15 பேரின் வீடுகளில் எவ்வளவு அதிகமாக இருக்கும்?” எனக் கேட்டுள்ளார்.
இது உண்மையா?:
நியூஸ்மீட்டர் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, இந்த வீடியோ தவறான தகவலுடன் வைரலாகி வருவதைக் கண்டறிந்தது. 2021-ம் ஆண்டு டிசம்பரில் வேலூரில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் இது. இதன் உண்மையை அறிய வைரலான வீடியோவில் இருந்து சில முக்கிய பிரேம்களை எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். டிசம்பர் 22, 2021 அன்று வைரலான வீடியோவைப் போன்ற புகைப்படத்துடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு செய்தியை வெளியிட்டதைக் கண்டறிந்தோம். அதில், “தமிழகத்தில் வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூமில் நடந்த கொள்ளை தொடர்பாக ரூ.8 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.
போலீசார் தங்கள் விசாரணையில் ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூமைச் சுற்றியுள்ள சுமார் 200 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் பல சந்தர்ப்பங்களில் அப்பகுதியில் சுற்றித் திரிவதைக் கண்டனர். இதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில், வேலூர் மற்றும் நகைக்கடை போன்ற தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடியபோது, டிசம்பர் 21, 2021 அன்று தி இந்து இணையதளத்தில் வெளியான செய்தியைக் கண்டோம். அதில் உள்ள தகவலின்படி, “பிரபலமான ஒரு நகைக்கடையில் கொள்ளை நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, மாவட்ட போலீஸார் ஒருவரைக் கைது செய்துள்ளதோடு, சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை சுடுகாட்டில் இருந்து எடுத்துள்ளனர்.”
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி (வேலூர் ரேஞ்ச்) ஏஜி பாபு, பள்ளிகொண்டா அருகே உள்ள கூச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.கே.ராமன் (23) இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறினார். டிசம்பர் 15-ம் தேதி ஷோரூமில் குழி தோண்டி, கடையில் இருந்த 12 சிசிடிவி கேமராக்களில் பெயிண்ட் அடித்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
இது சமந்தமாக 22 டிசம்பர் 2021 அன்று பிபிசி நியூஸ் தமிழின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோவையும் பார்த்தோம். தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் ஷோரூமில் திருடர்கள் கொள்ளையடித்து சுமார் 16 கிலோ தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக இந்த செய்தி வீடியோ கூறுகிறது. ஆகவே ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் வீடியோவில் காணப்பட்ட காட்சிகள் காவல்துறையால் கைப்பற்றப்பட்ட நகைகளுடன் ஒத்துப்போகின்றன. இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில், 2021 டிசம்பரில் வேலூரில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட தங்கம் தான் இது என்றும் ஃபேஸ்புக் வீடியோவில் கூறியது போல் பூசாரி வீட்டில் எடுக்கப்பட்டதல்ல என்றும் தெரிய வருகிறது.
Tirupati,Chittoor,Andhra Pradesh
January 01, 2025 3:34 PM IST
திருப்பதி கோவில் பூசாரி வீட்டில் தங்கம், பல கோடி ரூபாய் சிக்கியது உண்மையா? – போலீசார் அளித்த விளக்கம்!

