
நாளடைவில் போதிய வருவாய் இல்லாததால், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் ஆரம்பித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கிளினிக் தொடங்கிய பின், கேரளா வந்த நிமிஷா பிரியாவுடன் மஹ்தியும் உடன் வந்துள்ளார்.
இதையடுத்து தனியாக ஏமன் சென்ற செவிலி நிமிஷா பிரியாவிடம் இருந்து, முழுமையாக கிளினிக்கை அபகரிக்க மஹ்தி முற்பட்டுள்ளார். அதற்கு நிமிஷா பிரியா மறுப்பு தெரிவித்ததும், அவரை துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
கேரளா வந்த போது நிமிஷா பிரியாவுடன் எடுத்த போட்டோவை காட்டி, அவர் தனது மனைவி என்று கூறி ஏமன் அதிகாரிகளை மஹ்தி நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து பாஸ்போர்ட்டை தராமல் மிரட்டிய மஹ்திக்கு, மயக்க ஊசி செலுத்தி அதை மீட்க கேரள செவிலி திட்டமிட்டுள்ளார்.மயக்க மருந்து அதிக அளவில் உடலில் செலுத்தப்பட்டதால் மஹ்தி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த 2018 ஆண்டு ஏமனில் உள்ள கீழமை நீதிமன்றம் கேரள செவிலிக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, கடந்த 2023ம் ஆண்டு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக கேரள செவிலியை, மரண தண்டனையில் இருந்து விடுவிக்க அவரின் தாயார் பிரேமா குமாரி ஏமனில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இதனிடையே, உயிரிழந்த மஹ்தி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி, தனது மகளை வழக்கில் இருந்து விடுவிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதற்காக, ஏமனில் உள்ள இந்தியர்கள் மூலம் 34 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியுள்ளார். அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போனதால் பிரேமா குமாரி உட்பட அவரின் குடும்பத்தினர் செய்வது அறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற, ஏமன் அதிபர் ரஷாத் அல் அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். ஒரு மாதத்திற்குள் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், நிமிஷா பிரியாவை மீட்க, அவரது குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளதை அறிவோம் என குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு உறுதுணையாக, அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால், கொலை வழக்கில் தண்டனை பெற்ற கேரள செவிலி நிமிஷா பிரியா, மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவாரா என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
December 31, 2024 9:38 PM IST

