
Last Updated:
பெரியவர்கள் பேசி திருமணம் நிச்சயத்த நிலையில், 7 மாதங்களாக அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் எடுத்த அடுத்தடுத்த அதிரடி முடிவுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமண வீட்டாருக்கு இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளும் இழுபறிகளும் ஒரு பக்கம் என்றால், சொந்தக்காரர்கள் இடையில் புகுந்து செய்யும் அடாவடிகள் மறுபக்கம் என பல கல்யாணங்கள் கலாட்டாவில்தான் முடியும். சில விபரீதங்களில் முடிவதும் உண்டு. அப்படி, ஒரு சப்பாத்தி பிரச்னை, உத்தரப்பிரதேசத்தில் திருமணத்தையே நிறுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள ஹமித்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் மெக்தாப். இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் இடையே பெரியவர்கள் பேசி திருமணம் நிச்சயத்த நிலையில், 7 மாதங்களாக அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. கடந்த 22 ஆம் தேதி திருமண நிகழ்ச்சிகளும் விமர்சையாக தொடங்கின. உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை மணமகள் வீட்டில் தான் திருமணம் நடைபெறும். விருந்தினர்களாக வரும் மணமகன் வீட்டாருக்கு ராஜ உபசரிப்பு அளிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இன்றளவும் இருந்து வருகிறது.
அந்த வகையில், மெக்தாப் குடும்பத்தினரை பாரம்பரிய முறைப்படி இனிப்பு கொடுத்து வரவேற்ற பெண் வீட்டார், விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, மணமகன் வீட்டார் சிலருக்கு சப்பாத்தி பரிமாற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி மெக்தாப்பின் உறவினர்கள் சிலர், மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திருமண நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினர். திருமணம் முடிந்தவுடன் சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த மணமகள் வீட்டாருக்கு பேரதிர்ச்சியாய், மணமகன் மெக்தாப் இரவோடு இரவாக மாயமானார். தங்கள் உறவினருக்கு ரொட்டி பரிமாற தாமதமானதால் மணமகன் கோபத்தில் திருமணத்தையே நிறுத்திவிட்டதாக பேசப்பட்டது.
பின்னர்தான் தெரிந்தது, சப்பாத்திக்காக திருமணத்தை நிறுத்திவிட்டு அடுத்த சில நாட்களிலேயே உறவுக்காரப் பெண்ணை அந்த பலே மாப்பிள்ளை திருமணம் செய்துக்கொண்டது. வரதட்சணையாக மெகதாப்பிற்கு கொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாய் உள்பட திருமணத்துக்காக 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருந்த மணமகள் வீட்டார், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்நிலையத்தை நாடினர்.
உள்ளூர் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மணமகள் தனது குடும்பத்துடன் சென்று காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். அதன் அடிப்படையில், காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் நின்றவுடன் சோர்ந்து முடங்கிவிடாமல், தைரியத்துடன் பிரச்னையை எதிர்கொண்ட உத்தரப்பிரதேச இளம்பெண், நவயுக பெண்களுக்கான எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
December 28, 2024 4:05 PM IST

